கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் இளங்கலை பாடப் பிரிவில் 10 பட்டப் படிப்புகள் உள்ளன. பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், 14 உறுப்புக் கல்லூரிகள், 29 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இதற்கிடையே கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டு மற்றும் 2019-20 ஆம் கல்வியாண்டு மாணவர்களில், செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக அரியர் தேர்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் முறையில் எழுத்துத் தேர்வும், நேரடி முறையில் செய்முறைத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இவர்களுக்கான தேர்வு முடிவுகளை வேளாண்மைப் பல்கலைக் கழகம் டிசம்பர் 2-ம் தேதி வெளியிட்டது.




இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை எனவும், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் சுமார் 50 பேர் கடந்த வாரம் பல்கலைக் கழகத்துக்கு வந்தனர். பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு நினைவுக் கட்டிடத்தின் முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்திலும் ஈடுபட்டனர். மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தற்கு இணைய வழி நடைபெற்ற தோ்வில் மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் பல்கலைக்கழக நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பல்கலைக்கழக நிா்வாகத்தைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், “அரியர் தேர்வில் பல்வேறு குழறுபடிகள் நடந்துள்ளன. முறையாக விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை. மாணவர் பெயர் என்ற இடத்தில் ஸ்டேட் பங்க் ஆப் இந்தியா என போடப்பட்டு 63 மார்க்குகள் போடப்பட்டுள்ளன. அதேபோல நேரில் நடந்த செய்முறை தேர்வில் பங்கேற்கவில்லை என போடப்பட்டுள்ளது.




மாணவர்கள் முறைகேடு செய்ததாக கூறுவதை ஏற்க முடியாது. மாணவர்களுக்கு கண்காணிப்புகளுடன் தான் தேர்வு நடத்தப்பட்டது. ஒருவேளை முறைகேடு நடந்திருந்தால், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களை மட்டும் பெயிலாக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக மாணவர்களை பெயிலாக்கி இருப்பதை ஏற்க முடியாது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை மறு பரிசீலணை செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலையீட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.




இந்நிலையில் வேளாண்மை பல்கலைகழக நிர்வாகத்துடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்விடைந்தது. இதையடுத்து நேற்றிரவு மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்த முயன்ற போது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தை முன் நின்று நடத்திய இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த தினேஷ் ராஜா, ரமேஷ் கண்ணன், அசாரூதின், மது சங்கர் உள்ளிட்ட 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது சாய் பாபா காலனி காவல் துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.




இதனைத்தொடர்ந்து இன்று காலை கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழினியன் முன்னிலையில் 7 பேரையும் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களை சிறைக்கு அனுப்ப மறுத்த நீதிபதி தமிழினியன், ஜாமீனில் விடுவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல் துறையினரை கண்டித்து, இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.