காவேரி கூக்குரல் இயக்கமும் கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் இணைந்து கோவையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக இரண்டாம் தவணையாக 1 லட்சம் மரங்கள் வழங்கும் விழா இன்று (அக்டோபர் 10) நடைபெற்றது.

 

"பசுமை தொண்டாமுத்தூர்”

 

காவேரி கூக்குரல் இயக்கத்தின் நோக்கம், அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதாகும். அதன் ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் பகுதியின்  பசுமைப்பரப்பை அதிகரிக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் "பசுமை தொண்டாமுத்தூர்” என்ற இயக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 1 லட்சம் மரக்கன்றுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வெறும் இரண்டே மாதங்களில் அந்த இலக்கு அடையப்பட்டது. அதன் இரண்டாவது தவணையாக அடுத்த 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் விழா இன்று சீங்கப்பதி கிராமத்தில் நடைபெற்றது.



 

”விவசாயமும் பொருளாதாரமும்”

 

அதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் பேசுகையில், "காவேரி கூக்குரல் இயக்கம் அதன் பணிகளுக்காக ஐநா உள்ளிட்ட பல சுற்றுச்சூழல் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 30 வருடங்களாக, தொடர்ந்து பொது இடங்களில் மரங்கள் நட்டு வந்தாலும், விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் பலன் தரும் விதமாக இதனை மாற்றி தீர்வளித்த சத்குரு, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுத்து, விவசாயமும் பொருளாதாரமும் இணைந்தால் மட்டுமே, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவும் என்றார்.

 

”மரங்கள் நடுவது பலனை பலமடங்கு அதிகரித்துள்ளது”

 

இந்த வழிகாட்டுதலால், கடந்த மூன்று வருடங்களாக விவசாயிகளின் நிலங்களில் மரங்கள் நடுவது அதன் பலனை பலமடங்கு அதிகரித்துள்ளது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் பணிகள் சுற்றுச்சூழல் மேம்பாடு, பருவநிலை மாற்றம், மண் வளம், நதிகள் மீட்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. 

 

காவேரி கூக்குரல் இயக்கம், தொண்டாமுத்தூரை மாதிரி பகுதியாக உருவாக்கும் நோக்கத்தில் இதே நோக்கத்துடன் உள்ள சமூக  இயக்கங்களுடன் இணைந்து கடந்த மூன்று மாதங்களிலேயே 1 லட்சம் மரங்கள் நட்டுள்ளோம்" என்றார். 

 

”மரங்கள் நடுவது மட்டுமே தீர்வு”

 

செல்வம் ஏஜன்சீஸ் நிர்வாக இயக்குனர் திரு. நந்தகுமார் அவர்கள் பேசுகையில், "கட்டடங்கள் கட்டிட நிறைய மரங்களை அழித்தாக வேண்டிய நமது வாழ்க்கைச் சூழல் இருக்கிறது. விவசாயத்தின் அபாயகரமான சூழல் குறித்து நாம் திரு தமிழ்மாறன் அவர்களின் உரையில் அறிந்தோம். இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு இந்த மரங்கள் நடுவது மட்டுமே" என்றார்.

 

தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் 'சொல்லேர் உழவன்' செல்லமுத்து அவர்கள் பேசுகையில், "நாம் நமது தேவைகளுக்காக கோடிக்கணக்கான மரங்களை வெட்டி பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. மரங்களை வெட்டி சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை மாற்றி மரங்கள் வளர்த்து சம்பாதிப்போம் என்ற எண்ணத்தை விதைத்தது இந்த காவேரி கூக்குரல் இயக்கம். சத்குரு சமீபத்தில் மண் காப்போம் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு மிகச்சிறப்பான செயலை துவங்கியுள்ளார். 

 

உலகம் முழுக்க பருவநிலை மாற்றத்தால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளது. இதற்கான ஒரே தீர்வு மரங்கள் நடுவது மட்டுமே. மரங்கள் நடுவது மக்களுக்கான சேவை. மக்களுக்கு என்பது மகேசனுக்கு சேவை செய்வது போலாகும். எனவே இதை செய்துகொண்டிருக்கும் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கத்தினர் சிறப்பான செயலைச்செய்து கொண்டிருக்கிறார்கள். தீபாவளி, பொங்கல், திருமணம் உள்ளிட்ட உங்களின் வீட்டு விசேசங்களுக்கு மரங்களை நடுங்கள். 

 

இப்போது நல்ல மழை பெய்யும் சூழல் உள்ளது. இதற்கு ஈஷா நட்டிருக்கும் இந்த 4 கோடி மரங்களும் ஒரு காரணம் என்று உறுதியாக சொல்லலாம். நிரந்தரமற்ற இந்த வாழ்க்கையில் நாம் மரங்கள் நடுவது நம் பெயர் சொல்லவேண்டும். எனவே இந்த லட்ச மரங்கள் மட்டுமல்ல,  இன்னும் கோடி மரங்கள் நட வேண்டுமென வாழ்த்துகள்" என தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையம் வெளிப்படுத்தினார். 



 

ரூ.3/- க்கு மரக்கன்றுகள்:

 

மேலும் இந்த பகுதி மட்டுமின்றி  மற்ற பகுதியின் விவசாயிகளுக்கும் மரங்கள் எளிமையாக சென்று சேர்வதை உறுதிப்படுத்தும் வகையில் 30-க்கும் மேற்பட்ட ஈஷா நாற்றுப் பண்ணைகளில் 14 வகைக்கும் மேற்பட்ட டிம்பர் மரக்கன்றுகளை ரூ.3/- க்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

பழங்குடி மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் விதமாய் நிகழ்ந்த இந்த விழாவை காவேரி கூக்குரலுடன் இணைந்து கோயம்புத்தூர் கட்டுமான மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் நடத்தியது.

 

கோவை கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் திரு. விவசாய சங்க தலைவர் திரு. சுவாமிநாதன் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க தலைவர் திரு.  கு.செல்லமுத்து, கிருஷ்ணா கல்வி குழுமத்தின் நிறுவனத்தின் சார்பாக திரு ஆதித்யா, செல்வம் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனரும், கோவை வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான நந்தகுமார், வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் திரு. குமார், CEBACA சமூக பிரிவின் திரு. வள்ளுவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.