கை, பாதம், வாய் நோய் என்பதை கேரளாவில் தக்காளி காய்ச்சல் என அழைக்கின்றனர். இந்த கை, பாதம், வாய் நோய் குறிப்பாக காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ 16 என்ற வைரஸால் ஏற்படுகிறது. இது மிதமான பாதிப்பையே ஏற்படுத்தும். தோலில் சிவப்பு தடிப்புகள் தோன்றுவதால் இதற்கு தக்காளி காய்ச்சல் என்று பெயர் வைத்துள்ளனர். கேரளாவில் தக்காளி காய்ச்சலால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், தொண்டை எரிச்சல், தொண்டை, வாய் மற்றும் நாக்கில் புண், தலைவலி, கை, கால், முதுகுக்கு கீழ் மற்றும் பாதங்களில் கொப்பளங்கள் தோன்றுதல், பசியின்மை, தோலில் அரிப்பு, பின்னர் அங்கு சிவப்பு நிறத்தில் தட்டையாக மாறுதல், சில நேரங்களில் கொப்புளங்களாகவும் மாறுதல் ஆகியவை தக்காளி காய்ச்சலின் அறிகுறிகளாக உள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 85 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தக்காளி காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளா மாநிலத்தின் முக்கிய நுழைவாயிலான வாளையாறு பகுதியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர். அரசு பேருந்து மற்றும் கார்களில் வருகின்ற குழந்தைகளுக்கு கைகளில் கொப்பளம், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என பரிசோதித்து வருகின்றனர். பரிசோதனைக்கு பின்னரே கேரள பயணிகள் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
வாளையார் சோதனைச் சாவடியில் பயணிகளுக்கு, காய்ச்சல் அறிகுறி தென்படுகிறதா என்பதை பரிசோதிக்க இரண்டு சுகாதார ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பதை அறிய 24 பேர் அடங்கிய குழுவினர் சோதனை செய்து வருகின்றனர். இதேபோல மற்ற எல்லையோர பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வருவாய் ஆய்வாளர் ஆனந்தராஜ் கூறுகையில், “கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்களை சோதனை செய்து வருகிறோம். 5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பரவி வருவதாலும், கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும் இந்த சோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் அறிகுறி தென்படுகிறதா என்பது குறித்து சோதனை செய்யப்படுகிறது. தற்போது வரை நடந்த சோதனையில் எந்த குழந்தைக்கும் அறிகுறி இல்லை. ஒருவேளை அறிகுறி கண்டறியப்பட்டால் அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்போம். அதேபோல பயணிகள் முகக்கவசம் அணியவும், தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தி வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.