கோவையில் பீக்ஹவர் கட்டணங்களை குறைக்க கோரி அரசின்  கவனத்தை ஈர்க்கும் விதமாக வரும் 25 ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தொழில் அமைப்பினர்  தெரிவித்துள்ளனர்.


பீக் ஹவர் மின்கட்டணம்:


தமிழ்நாட்டில் பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தொழில் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மின் பயனீட்டாளர் கூட்டமைப்பை சேர்ந்த தொழில் அமைப்பினர் வரும் 25ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் கோவையில் உள்ள மற்றொரு பெரிய தொழில் கூட்டமைப்பான தமிழ்நாடு தொழில் அமைப்பினர் கொடிசியா அலுவலகத்தில் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.


அப்போது பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திருஞானம், பொருளாதாரம் மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வருவதாகவும், கடந்த வருடம் அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து இருப்பதாகவும் தெரிவித்தார். இது குறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை எனவும், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின் கட்டணம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.


25ம் தேதி போராட்டம்:


ஆண்டுதோறும் ஒரு சதவீத மின் கட்டண உயர்வு மட்டுமே இருத்தல் வேண்டும், 112 முதல் 150 கிலோ வாட் மின்சாரம் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதனால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்து வருவதாகவும்  வேதனை தெரிவித்த தொழில் அமைப்பினர், இது குறித்து தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 25ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.


இதனால் சுமார் 1500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பலரின் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். கோவையில் உள்ள இரண்டு பெரிய தொழில் கூட்டமைப்புகளை சேர்ந்தவர்களும் ஒரே நாளில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால்,  அன்றைய தினம் தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.