கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர்த்த மற்ற அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளால் கொரோனா தொற்று பரவல் ஏற்படுகிறது என்பதால், கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள 13 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கேரளாவில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட, கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக் கொண்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் வர அனுமதி அளிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அச்சான்றிதழ் இல்லாதவர்களுக்கு சோதனைச் சாவடியிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் மாநில எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.




கேரள மாநிலத்தின் முக்கிய நுழைவாயிலான கோவை மாவட்டம் வாளையார் பகுதியில் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயணிகளிடம் சான்றிதழ்கள் சோதனை செய்த பின்னரே, தமிழ்நாட்டிற்குள் வர அனுமதிக்கின்றனர். கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசி சான்றிதழ் இன்றி வருவோரை மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பி வருகின்றனர். அவசர தேவை என்றால் மட்டும், சோதனைச் சாவடியில் கொரோனா பரிசோதனை செய்த பின் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் வாளையாறு வந்த 50 வாகனங்கள் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதுவரை கேரளாவில் இருந்து கோவை வந்த 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.




இதேபோல கோவை இரயில் நிலையத்திலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடமும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்படுகிறது. இல்லையெனில் இரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X