கோவையில் அதிமுக பிரமுகரின் ஆலயம் அறக்கட்டளையில் 3வது நாளாக ஐடி ரெய்டு

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர் நடத்தும் ஆலயம் அறக்கட்டளையில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continues below advertisement

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அதிமுக இளைஞரணியில் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். மேலும் நமது அம்மா நாளிதழின் வெளியிட்டாளராகவும் இருந்து வருகிறார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக அறியப்படும், இவர் ஒப்பந்ததார் ஆகவும் உள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக் காலங்களில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்து செய்துள்ளார். இவரது மனைவி சர்மிளா சந்திரசேகர் கோவை மாநகராட்சியில் 38 வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

Continues below advertisement


இந்நிலையில் வடவள்ளி பகுதியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் கடந்த 6 ம் தேதியன்று வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாகவும், முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், இந்த சோதனை நடத்தப்படுகிறது. சந்திரசேகரின் தந்தை, சகோதாரர், சகோதரி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சந்திரசேகர் வீட்டில் காலை 11 மணி முதல், நள்ளிரவு 12 வரை 13 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


இதேபோல கோவை அவிநாசி சாலையில் உள்ள கேசிபி நிறுவனத்தில் நேற்று, நேற்று முன் தினம் என இரண்டு நாட்கள் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிறுவனத்தில் சந்திரசேகரின் நண்பரான சந்திரபிரகாஷ் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார். இந்நிலையில் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள சந்திரசேகர் நடத்தும் ஆலயம் அறக்கட்டளையில் வருமான வரித்துறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது நாளாக இந்த சோதனை நடந்து வருகிறது. அறக்கட்டளைக்கு முறையான கணக்கு இல்லாமல் பணம் வந்ததா என்பது குறித்தும், அறக்கட்டளை சார்பில் சமுதாய பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் மற்றும் டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திய போது, சந்திரசேகர் வீடு, கேசிபி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் முறைகேடுகள் தொடர்பாக சந்திரசேகர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரண்டு முறை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடந்த நிலையில், முதல் முறையாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement