கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரபல கோழி வளர்ப்பு நிறுவன தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் அருள் முருகன் மற்றும் சரவண முருகன். இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். இவர்கள் இருவரும் கோவை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் எம்பிஎஸ் ஹேட் சரீஸ் என்னும் பெயரில் கோழி தீவனம் மற்றும் கோழிப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் அருள் முருகன் மற்றும் சரவண முருகன் ஆகியோரது பிரபல கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. அதன் தலைமை அலுவலகம் பொள்ளாச்சி வெங்கடேச காலனியில் செயல்படுகிறது இந்நிலையில் இவர்களது அலுவலகம் மற்றும் பண்ணை உள்ளிட்ட நான்கு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரி சக்திவேல் தலைமையிலான குழு விடிய விடிய சோதனை நடத்தினர்.
32 கோடி பறிமுதல்
இந்நிலையில் நேற்று இரவு தமிழக முழுவதும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனைக்கு வந்தனர். இதில் பொள்ளாச்சி வெங்கடேசா காலனி பகுதியில் உள்ள எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தின் நிர்வாக தலைமை அலுவலகத்தில் இரவு முழுவதும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். சுமார் பத்து வாகனங்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனையை மேற்கொண்டனர். பொள்ளாச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள எம்பிஎஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், முறையாக வருமான வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அலுவலகத்தில் வைத்திருந்த சுமார் 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட 32 கோடி ரூபாய் பணத்தை பொள்ளாச்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக அந்த கோழிப்பண்ணை தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்,