கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஜாமினில் உள்ள நான்கு பேருக்கு நீலகிரி காவல் துறையினர் விசாரணைக்கு ஆஜாராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோரை உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜாராகுமாறு தெரிவித்துள்ளனர். தீபு, ஜித்தின் ஜாய் ஆகியோரை வருகின்ற 24-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜாராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


கோடநாடு எஸ்டேட் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக, அவரின் குடும்பத்தினரிடம் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கோடநாடு எஸ்டேட் மற்றும் நண்பர்களிடம் இருந்து தினேஷ்குமாருக்கு எந்த வித அழுத்தம் தரப்படவில்லை எனவும், திடீரென ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை எனவும் அவரது தந்தை போஜன் தெரிவித்தார். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த இரண்டு மாதங்களுக்கு பின்னர், தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார்.




பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் நேற்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்கு 1000 பக்கங்களை கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 29-ஆம் தேதிக்கு நீதிபதி நந்தினி ஒத்திவைத்தார்.


அபராத தொகை விதிக்காமல் இருக்க ஒரு இலட்ச ரூபாய் இலஞ்சம் வாங்கிய வணிகவரி துறை அதிகாரி விவேகானந்தன் என்பவரை இலஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர். ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளரிடம் தணிக்கையாளர் செய்த தவறு தொடர்பாக 15 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்காமல் இருக்க இலஞ்சம் தர வேண்டுமென கேட்டுள்ளார்.


கோவை மாவட்டம் சிறுமுகை அருகேயுள்ள வரமலை பகுதியில் ஆண் புலி ஒன்று உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. வயது முதிர்வின் காரணமாக புலி உயிரிழந்து இருக்கலாம் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீரின் அளவு 16,000 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 750 கன அடியில் இருந்து 800 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


கோவையில் நேற்று கல்லூரி மாணவர்கள் உட்பட 218 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதேபோல தொற்று பாதிப்புகளும் சற்று அதிகரித்துள்ளது.




கோவையில் மேற்கு புறவழிச்சாலை திட்டத்திற்கு நில எடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாலக்காடு சாலையில் இருந்து மாநகர பகுதிக்குள் நுழையாமல் நரசிம்மநாய்க்கன்பாளையம் பகுதி வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் கிராமப்பகுதிக்களுள் நுழைவதை தடுக்க கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்படும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். சிறு, குறு தொழில்களை மீட்டெடுப்பதை தமிழ்நாடு அரசின் நோக்கம் எனவும், ஏற்றுமதி கொள்கை ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். கோவையில் நடந்த தொழில் துறையினர் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இதனை அவர் தெரிவித்தார்.