• கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.  குறிப்பாக லங்கா கார்னர் இரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் தண்ணீரில் சிக்கின. இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால், இன்றும் மழைப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை இரயில் சேவை வருகின்ற 14 ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. மழை மற்றும் மண் சரிவு ஆகிய காரணங்களால் பல நாட்களாக மலை இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு நிலையில், மீண்டும் இரயில் சேவை இரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கோவையின் குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணையின் நீர் மட்டம் 44 1/2 அடியாக நீடித்து வருகிறது. இதேபோல பில்லூர் அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

  • முதுமலை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில் பருவ மழைக்கு பிந்தைய வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியுள்ளன. நேற்று துவங்கிய இந்த பணிகள் வருகின்ற 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. வன விலங்குகளின் காலடித்தடம், எச்சம் மற்றும் நேரில் பார்த்தல் உள்ளிட்ட தகவல்கள் மூலம் வன விலங்குகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

  • கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோம்வாரி என்ற பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில், மில்லின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி முத்தையா மற்றும் விடுதி வார்டன் லதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பெண்ணை அடித்து, உதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • சேலத்தில் நடைபெற்ற திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் பணம் மட்டும்தான்; கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக, ஆட்சியில் இருந்ததால் தற்போது வசதியாக உள்ளதாக தெரிவித்தார்.  

  • வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிச்சயம் பெற்றுத் தருவார் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

  • தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ராக்கிங் செய்ததால், இரண்டாம் ஆண்டு மாணவர் மன உளைச்சலில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • அரூர் அருகே வனப் பகுதியில் உள்ள ஏரி உடைந்ததால், 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பென்னாகரம் அருகே ஏரி நீர் வீட்டில் புகுந்ததால், வீடு இடிந்து விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

  • தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆபத்தை உணராமல், கயிறு கட்டி வாணியாற்றை மக்கள் கடந்து செல்கின்றனர். உயர் மட்ட பாலம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.