கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில்  இன்று காலை முதல் பரவலாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.


நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.


போத்தனூர் – பாலக்காடு இரயில் பாதையில் இரயில் மோதி யானைகள் உயிரிழந்தது தொடர்பாக, தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். வன ஊழியர்களின் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் எனவும், கூடுதல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும் எனவும் வனத்துறையினருக்கு அறிவுறுத்தினார்.


கோவை சுகுணாபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள இடத்தில் வனத்துறையினர்  கண்காணித்து வருகின்றனர். இரவு மற்றும்  அதிகாலை வேளையில் தனியாக வரவேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த அற்புதராஜ் என்ற போஸ்ட் மாஸ்டர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும், இவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்த நிலையில், தகாத வார்த்தைகளில் பேசி தொல்லை தருவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தற்கொலைக்கு முயன்றார்.


மேட்டூர் அணையின் நீர் வரத்து 20,500 கன அடியில் இருந்து 18,500 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து உபரி நீராக 18,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 120 கன அடியாக உள்ளது.


7 பேர்  விடுதலை பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை எனவும், இவ்விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதோடு, 7 பேரையும் விடுதலை செய்யும் எண்ணம் திமுகவிற்கு இல்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.


அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலர்கள் மீது வழக்கு தொடர்ந்தும் மிரட்டியும் திமுகவில் இணைய செய்கின்றனர் எனவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அடாவடி தனமாக செயல்பட்டு வருகிறார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.


தருமபுரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில், கள்ளத்தொடர்பு கைவிட மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், கள்ளக் காதலனை அடித்து கொலை செய்த கள்ளக் காதலி மற்றும் அவரது மகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.


தருமபுரி நகரில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத திரையரங்கு மற்றும் இரண்டு நகைக் கடைக்கு ரூ.35,000 அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்தார்.