கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி தற்கொலை வழக்கில், பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை காவல் துறையினர் கைது செய்தனர். ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


17 வயது பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரியர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத சின்மயா வித்யாலயா பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, பல்வேறு அமைப்பினர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அப்பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் தபெதிக, திவிக, எஸ்.டி.பி.ஐ, உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.


நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் 5 நாட்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் அம்மாவட்டத்திற்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழையை எதிர்கொள்ள 42 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், 456 தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சேலத்தில் தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் உயிரிழந்தார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 5 பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேட்டூர் அணையில் இருந்து 16 கண் பாலம் வழியாக உபரி நீர் உடனடியாக திறக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.


ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் 60 அடி பாலம் அருகே திடீரென ஏற்பட்ட மண்சரிவினால் சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.


தருமபுரி அருகே மலைப் பாதையில் பாறைகள் சரிந்ததால், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் 15 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டு, ரயில் பாதை சீரமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சேலம் மார்கத்தில் இரயில் இயக்கம் மீண்டும் தொடங்கியது.


தருமபுரி மாவட்டம் சித்தேரி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அரூர் அருகே வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணை நிரம்பியது. வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் உபரிநீராக ஆற்றில் செல்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து வருகிறது. கடந்த வாரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது மழை குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்து வருகிறது.


தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே வீட்டில் போலி மதுபானம் தயாரித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மதுபானம் தயாரித்த பேரல்கள், போலி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.