கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் பகுதியை வேறொரு பள்ளிக்கு மாறினார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டக் கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த போது பெற்றோர்கள் கதவு பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்கதாதால், சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றனர். அப்போது மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் மாணவி பிணமாக தொங்கிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் செய்து வருகின்றனர். மாணவியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி மேலாடையை கழற்றி ப்பாலியல் தொல்லை அளித்ததாகவும், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் மாணவிக்கு உளவியல் ஆலோசணையும் பள்ளி நிர்வாகம் வழங்கியதாகவும், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்டார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.




இந்நிலையில் மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை பிடித்து காவல் துறையினர் இரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வந்தனர். இதையடுத்து நேற்றிரவு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.