வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும், பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும் 21 குறைந்த பதட்டம் மிகுந்த இடங்களாக கண்டறியப்பட்டு, சிறப்புக் குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவை வாலாங்குளம் நிரம்பி வெளியேறும் உபரி நீர் சாக்கடை கால்வாய் வழியாக சாலையில் ஆறு போல ஓடி வருகிறது. ராமநாதபுரம், ஒலம்பஸ், உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் சாக்கடை நீரோடு கலந்து ஓடி வருகிறது. இன்றும் நிற்காமல் வெள்ள நீர் செல்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தனபால், ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை கனகராஜ் வீட்டில் இருந்து 3 செல்போன்கள் மற்றும் 6 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட காவல் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி தொற்ற்று பாதிப்புகள் நூறுக்கும் குறைவாக பதிவாகி வந்த நிலையில், நேற்று சற்று அதிகரித்து மீண்டும் நூறை கடந்துள்ளது.
கோவை பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 32 சவரண் தங்கநகை, 90 ஆயிரம் பணம், மடிக்கணினி உள்ளிட்டவை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பந்தயசாலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானிலை ஆய்வுமையத்தால் புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாலும், சேலம் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை யொட்டியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சேலம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
சேலத்தில் கடந்த வாரம் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், ஒரு வாரத்திற்கு பின்னர் சாலை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து துவங்கியது.
தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வாணியாறு உபரிநீர் திறப்பால், 3 ஏரிகள் நிரம்பியது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர் வரத்து சரிந்து வருகிறது. நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.