கோடநாடு வழக்கில் கைதான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர் ரமேஷ் நேற்று நீலகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 5 நாட்கள் காவல் விசாரணை முடிந்த நிலையில், மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஏற்கனவே கனகராஜின் சகோதாரர் தனபாலுக்கும் 5 நாட்கள் காவல் விசாரணை நீட்டிக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 1010 கன அடி நீர் வரத்து உள்ளது. இதேபோல தொடர் நீர் வரத்தினால் குளங்கள், தடுப்பணைகள் நிரம்பி உள்ளன.


தீபாவளி பண்டியைகை முன்னிட்டு கோவையில் உள்ள வெளியூர்வாசிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கொடிசியா மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டம் கருமத்தப்பட்டி பகுதியில் நிர்மலா என்பவரின் வீட்டிற்குள் புகுந்து திருடிய இரண்டு பேரை பொது மக்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பியோடிய நிலையில், பிடிபட்ட மற்றொரு நபர் முன்னாள் காவலர் என்பது தெரியவந்தது. காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முனிஸ்வரன் என்பதும், ஆயுதப்படை காவலராக பணியாற்றிய அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.


பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை வருகின்ற 11 ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார். இவ்வழக்கில் கைதான 9 பேரும் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.


கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 114 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார்.


நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மஞ்சூர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. சாலையில் சரிந்து மண்ணை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.


தர்மபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் கோவையில் தொடர் மழை காரணமாக கடை வீதிகளில் பொது மக்களின் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப் சிலிப் கோழி கமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் வளர்ப்பு யானை தாக்கியதில் சந்திரன் என்ற பாகன் காயமடைந்தார். காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.