கூட்டுறவு வங்கி மாநிலத் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக இளங்கோவன் உள்ளார்.  அதிமுகவின் ஜெ பேரவை புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார் இளங்கோவன். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருங்கியவர். அவரது வலது கரம் என்றெல்லாம் அவரை அழைப்பதுண்டு. வருமானத்துக்கு அதிகமாக 131% அதிகமாக சொத்து சேர்த்ததாக இளங்கோவன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கனகராஜ் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க விசாரணை அதிகாரியாக ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்து வந்தனர்.




கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜித்தின் ஜாயிடம் விசாரணை நடத்த நீலகிரி மாவட்ட காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட காவல் துறையினர் உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்துள்ளனர்.


கோவையை சேர்ந்த மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவிற்கு கட்சி பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகியுள்ளார். மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற புதிய இயக்கத்தை துவங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நாளை மீண்டும் கோவை நீதிமன்றத்தில் நடக்கிறது. கோவை விமானப்படை கல்லூரியில் பயிற்சிக்காக வந்த 28 வயது பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக அமிதேஷ் ஹர்முக் என்ற சக அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே இந்த வழக்கை விசாரிக்க அனுமதி கோரி கோவை மகளிர் காவல் துறையினர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.


கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. நேற்று தொற்று பாதிப்புகள் சற்று குறைந்தது. 137 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.


கோவை லட்சுமி மில் பகுதியில் மதுபானம் கலந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சுகாதாரத் துறை அமைச்சருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது 2 மதுபாட்டில்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.




கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இரிடியம் மோசடி கும்பலை சேர்ந்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இரிடியம் கலசத்தை தருவதாக 27 இலட்ச ரூபாய் மோசடி செய்தவர்களை கைது செய்த காவல் துறையினர், 99 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.


கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.


கோவை மாவட்டத்தில் நாளை 6 ஆவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதற்காக 1429 மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே நடந்த 5 முகாம்களில் 5 லட்சத்து 51 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.