கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிறையில் உள்ள வாளையார் மனோஜ் ஜாமீன் நிபந்தனையில் மீண்டும் நீலகிரி நீதிமன்றம் தளர்வு வழங்கியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த இரத்த உறவினர்கள் இருவர் ஜாமீன்தாரர்களாக இருக்கலாம் என்ற நிபந்தனையில், மனைவி மற்றும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் ஜாமீன்தாரராக இருக்கலாம் என நீதிமன்றம் தளர்வு வழங்கியுள்ளது.
கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக, கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. 3 மணி நேரம் நடந்த விசாரணையில், தினேஷ்குமார் தற்கொலைக்கு வேறு அழுத்தங்கள் இருந்ததா என்பது குறித்து விசாரித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட திபு, ஜித்தின் ஜாய் ஆகியோர் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை.
கோவையில் நேற்று கொரோனா தொற்று பாதிப்புகள் சற்று குறைந்தது. அதேசமயம் திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன் என்ற தோட்ட தொழிலாளி புலி தாக்கி உயிரிழந்தார். ஏற்கனவே ஆடு, மாடுகளை புலி அடித்துக் கொன்று வருவதால், கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வந்தனர். இந்த நிலையில் புலியை சுட்டுக் கொல்ல வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சிறு குன்றா பகுதியில் சுற்றுலா பயணிகளிடம் மது போதையில் தகராறு செய்ததாக வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் கைது செய்யப்பட்டார். வால்பாறை நீதிமன்ற எழுத்தர் மனோகரனின் விருந்தினர்களிடம் தகராறு செய்ததோடு, இரவு நேரத்தில் தங்கும் விடுதியில் இருந்து வெளியேற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வனச்சரகர் மீது நீதித் துறை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொய் வழக்கு போட்டதாக கூறி, ஆனைமலை புலிகள் காப்பக வன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை – கோவா இடையே நேரடி விமான சேவை துவக்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருகின்ற அக்டோபர் 31 ம் தேதி முதல் இந்த விமான சேவை துவங்கும் எனவும், இதற்கான முன் பதிவு நடந்து வருவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் நாளை மூன்றாவது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 439 தடுப்பூசி மையங்களில் ஒரு இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு நாட்கள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தினமும் ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப்பாதையில் 27 வது கொண்டை ஊசி வளைவில் லாரி பழுதாகி நின்றதால், 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திம்பம் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியில் அபாயகரமான 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.
சேலம் மாவட்டத்தில் காவல்துறையினர் விடிய விடிய நடத்திய சோதனையில் 105 ரவுடிகள் அதிரடி கைது. சேலம் மாநகராட்சி பகுதியில் 73 ரவுடிகளும், மாவட்டத்தில் 32 ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.