கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்தவர் நான்சி. 32 வயதான இவர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வினோத். இவர்களுக்கு திருமணமாகி 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனிடையே கடந்த சில வருடங்களாக நான்சி நடத்தையில் வினோத்துக்கு சந்தேகம் இருந்ததாகவும், இருவருக்கும் இடையே குடும்ப சண்டை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு மேல் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் இன்று வினோத் நான்சி பணிபுரியும் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது நான்சி பணிபுரியும் பிரிவிற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு 9 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த நான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


நான்சியின் அலறல் சத்தம் கேட்ட சக ஊழியர்கள் வினோத்தை பிடித்து அறையில் அடைத்தனர். நான்சியை கத்தியால் குத்தியபோது, வினோத்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பந்தயசாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்சியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து மருத்துவமனையின் தரப்பில் இருப்பிட மருத்துவர் சுந்தரராஜன் கூறும் போது, ”மருத்துவமனை வளாகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.  குடும்ப சண்டை காரணமாக அவரது கணவர் நான்சியை கத்தியால் கொண்டு குத்தியுள்ளார். தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மற்றொரு குற்றச் சம்பவம்:


பட்டா கத்தியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம் - 4 பேர் கைது




கோவை வெரைட்டி ஹால்ரோடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவரது. செல்போனுக்கு வீடியோ ஒன்று வந்துள்ளது. அதில், நள்ளிரவில் 6 இளைஞர்கள் ஒன்று கூடி நடுரோட்டில் நின்று கொண்டு பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் இருந்துள்ளன. இது குறித்து விசாரித்த போது இடையர் வீதி பகுதியில் கடந்த மாதம் 25 ம் தேதி எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இது குறித்து மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


அதில் செல்வபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் அசோக்குமார் (30) என்பவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து செல்வபுரத்தை சேர்ந்த அசோக்குமாரை கைது செய்த காவல் துறையினர் அவரது நண்பர்களான செல்வபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அரவிந்த்குமார், வடவள்ளி பி.என்.புதூரை சேர்ந்த கூலி தொழிலாளி தினேஷ்குமார், காந்திபார்க் பகுதியை சேர்ந்த பார்த்திபன் ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய இருவரை தேடி வருகின்றனர். அசோக்குமார், தினேஷ்குமார், பார்த்திபன் ஆகியோர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.