Crime : சதுரங்கவேட்டை பாணியில் இரியடியம் மோசடி - கணவன், மனைவி கைது

தங்களிடம் விலை மதிப்பற்ற பொருளான இரிடியம் இருப்பதாகவும், அதனை வெளிநாட்டில் விற்றால் கோடிக் கணக்கில் லாபம் பெறலாம் என சீனிவாசனை நம்ப வைத்துள்ளனர்

Continues below advertisement

சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். அவரது நண்பரான கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரோ வில்சன் என்பவர் மூலம் கோவை இடிகரை பகுதியைச் சேர்ந்த சியாம் (எ) ஜாய் மோகன் என்பவர் அறிமுகமாகி உள்ளார். சியாம் மற்றும் அவரது மனைவியான சஜிதா ஆகியோர் தங்களிடம் விலை மதிப்பற்ற பொருளான இரிடியம் இருப்பதாகவும், அதனை வெளிநாட்டில் விற்றால் கோடிக் கணக்கில் லாபம் பெறலாம் என சீனிவாசனை நம்ப வைத்துள்ளனர். பின்னர் இரிடியத்தை சோதனை செய்வதற்காக அறிவியல் நுட்பம் தெரிந்த Y.G.சேகர் என்பவரை சீனிவாசனுக்கு அறிமுகம் செய்து வைத்து, அதனை சோதனை செய்ய சீனிவாசனிடம் இருந்து 10 லட்ச ரூபாயை மூவரும் பெற்று உள்ளனர்.

Continues below advertisement

இரிடியம் மோசடி

பின்னர் சியாம் மூலம் வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்வதாக அறிமுகமான வருண் பிரசாத் ரெட்டி, ரவீந்திர பிரசாத், அருண்குமார் மற்றும் ஆனந்த வெங்கடேசன் ஆகியோர்கள் சோதனை செய்யப்பட்ட இருடியத்தை உண்மையானது என்றும், அதனை வெளிநாட்டில் உள்ள கம்பெனியில் பல கோடி மதிப்பில் விற்றுக் கொடுப்பதாக கூறியுள்ளனர். அதற்கு முன் பணமாக சீனிவாசனிடம் இருந்து மேலும் ரூபாய் 15 லட்சம் பணம் பெற்று உள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து எவ்வித தகவலும் வராமல் இருக்கவே சந்தேகம் அடைந்த சீனிவாசன் விசாரித்துப் பார்த்ததில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உள்ளார். இது தொடர்பாக சீனிவாசன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் புகார் அளித்ததன் பேரில், கோவை மாவட்ட குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இருவர் கைது

பின்னர் காவல் துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு கேரள மாநிலத்தை சேர்ந்த சியாம் (எ) ஜாய் மோகன் (44) மற்றும் அவரது மனைவியான சஜிதா (38) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இரிடியம், ரூ.4 இலட்சத்து 99 ஆயிரம் பணம் மற்றும் தங்க நகைகள் சுமார் 77 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இதுபோன்ற நூதன மோசடி தொடர்பாக பொதுமக்கள் நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் இது போன்று மோசடி குற்றங்கள் தொடர்பாக தகவல் அறிந்தால் பொதுமக்கள் தயங்காமல் காவல் துறைக்கு தகவல் அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் இரிடியம் மோசடி கும்பல் ஏமாற்றி இலட்சக்கணக்கில் பணம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola