கோவை ஒத்தகால்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆதி நாராயணன். 34 வயதான இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் 32 வயதான பெண் ஒருவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆதிநாராயணன் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (37) என்ற நண்பர் உள்ளார். கார்த்திகேயனுக்கு திருமணமாகி மனைவி இறந்து விட்ட நிலையில் குழந்தைகளை ஊரில் தாயார் வீட்டில் விட்டு, கோவை காந்திபுரம் பகுதியில் தங்கியிருந்து ஒரு பர்னிச்சர் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 17 ம் தேதியன்று ஆதிநாராயணன் வீட்டிற்கு ஆதிநாராயணும், கார்த்திகேயனும் குடி போதையில் வந்துள்ளனர். அப்போது ஆதிநாராயணன் தனது மனைவிக்கு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து கட்டாயப்படுத்தி குடிக்க கொடுத்துள்ளார். அதற்கு அவர் மறுக்கவே வலுகட்டாயமாக வாயில் ஊற்றிய போது, அதனை தட்டிவிட்டு அவர் படுக்கை அறைக்கு சென்றுள்ளார். அப்போது பின் தொடர்ந்து சென்ற ஆதிநாராயணன் அவரை படுக்கை அறையில் இருந்து இழுத்து வந்து கார்த்திகேயனுடன் உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கார்த்திகேயன் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனை வெளியில் கூறினால் கொன்று விடுவதாக ஆதி நாராயணன் கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதிநாராயணன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். நண்பரின் பாலியல் இச்சைக்கு கணவரே மனைவியை பலியாக்கிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்