நீலகிரி மாவட்டம் கூடலூரில் காயம்பட்ட காட்டு யானையை பிடித்த வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சில்வர் கிளவுட், கோக்கால் உள்ளிட்ட  சுற்றுவட்டாரப் பகுதிகளில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உலவி வந்தது. இந்த யானை அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தின் பெயரான ‘சில்வர் மான்ஸ்ட்ரா’ என்ற பெயரில் உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டு வந்தது. இந்த யானைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வால் பகுதியை ஒட்டிய தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனைக் கவனித்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் யானையை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மற்ற காட்டு யானைகளோடு ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்பட்டு இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அவ்வப்போது பழங்களில் மாத்திரைகளை வைத்து யானைக்கு தொடர்ந்து உணவாக கொடுத்து வந்தனர்.


யானை நடமாடும் பகுதிகளில் மாத்திரை வைத்த உணவை வைத்துச்செல்வதும், அதனை யானை உட்கொள்வதும் வழக்கமாக இருந்தது. இருப்பினும் யானையின் காயம் குணமடையவில்லை. காயம் மேலும் மோசமானது. யானையின் பின் பகுதி முழுக்க புரையோடி புழு வைத்து, உடல் மெலிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு வந்தது. இந்த யானைக்கு உடனடியாக சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டுமென உள்ளூர் மக்கள் வலியுறுத்தினர்.  




யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 3 நாட்களாக யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். மேலும் யானைக்கு சிகிச்சை அளிக்க முதுமலையில் உள்ள அபயரண்யம் பகுதியில் ‘கரோல்’ எனப்படும் மரக்கூண்டை தயார் செய்தனர். இந்நிலையில் இன்று காலை புத்தூர் வயல் பகுதியில் அந்த யானை தென்பட்டது.  இதையடுத்து யானையை கண்காணித்த வனத்துறையினர் ஈப்பங்காடு பகுதியில் உள்ள ஒரு காபி தோட்டத்தில் யானை இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து விஜய், சுமங்களா ஆகிய இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் கால்நடை மருத்துவர்கள் குழுவோடு யானையை சுற்றி வளைத்தனர்.


மயக்க ஊசி செலுத்தாமலேயே பிடிக்க முடிவு செய்யப்பட்டது. சுருக்கிட்ட கயிற்றைப் போட்டி அதற்குள் யானையை வரவழைத்து, கால்களை பிணைத்தனர். தொடர்ந்து யானையை பிடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். காலில் வீக்கம் இருப்பதால் கால்நடை மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சையளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த நடவடிக்கை காலதாமதமான நடவடிக்கை எனவும், ஆரம்ப நிலையிலையே யானையை பிடித்து சிகிச்சை அளித்து இருக்க வேண்டும் எனவும், எப்படி இருப்பினும் யானையை காப்பாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.