கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள கண்ணார்பாளையத்தில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் உணவகம் சூறையாடிய இந்து முன்னணி அமைப்பினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கண்ணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கண்ணார்பாளையம் நால் ரோடு பகுதியில் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் உணவகத்தை இன்று திறக்க இருந்தார். உணவகத்தை திறப்பதற்கான ஏற்பாடு பணிகளில் நேற்று தொழிலாளர்களுடன் பிரபாகரன் ஈடுபட்டு வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஒன்று ஹோட்டல் உரிமையாளர் பிரபாகரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ”பெரியார் பெயரில் உணவகம் நடத்துவதா?” எனக் கேட்டு கடையில் இருந்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் கடையில் இருந்த உணவகத்தின் டேபிள், மேசைகள், கண்ணாடி, பெயர் பலகை உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்.
இதனிடையே அக்கும்பல் தாக்குதல் நடத்தியதில் அங்கிருந்த அருண் (21) என்பவருக்கு படுகாயமடைந்தார். கடையின் உரிமையாளர் பிரபாகரன் லேசான காயமடைந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அருண் காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு 36 தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் பிரபாகரன் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காரமடை காவல் துறையினர், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரியார் பெயரில் உணவகம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தி கடையை சூறையாடியது தெரியவந்தது. இதையடுத்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ரவி பாரதி, சரவணக்குமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிரபாகரன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். பெரியார் பெயரில் திறக்கப்பட இருந்த உணவகம் சூறையாடப்பட்ட சம்பவம் காரமடையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் பெயரில் திறக்கப்பட இருந்த உணவகம் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்து முன்னணி தாக்குதல் நடத்தியதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், “இந்து முன்னணி அமைப்பினர் கடையில் புகுந்து ‘இது எங்கள் கோட்டை. இங்கே எப்படி பெரியார் பெயரில் கடை தொடங்குவாய்?’ எனக் கேட்டு பிரபாகரன் அவரது மனைவி மற்றும் ஊழியர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். இந்து முன்னணி அமைப்பினரை கண்டித்து காரமடை பகுதியில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்