கோவை அருகே புளிய மரத்தில் புளியங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி, உயர் அழுத்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

இரும்பு கம்பியுடன் மரத்தில் ஏறிய தொழிலாளி

கோவை அருகேயுள்ள கோட்டைபாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் சம்பத் (வயது சுமார் 40). இவர் தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன் அஷ்யந்த் ஆகியோருடன் நேற்று கோவை – சக்தி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள குரும்பபாளையம் பகுதியில் புளியங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

Continues below advertisement

அந்த பகுதியில் உள்ள உயரமான புளிய மரத்தில் இருந்து காய்களை பறிப்பதற்காக, சம்பத் சுமார் 15 அடி நீளமுள்ள இரும்புக் கம்பியை பயன்படுத்தி மரத்தில் ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது, கவனக்குறைவாக இரும்புக் கம்பி மரத்துக்கு அருகே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், சம்பத்துக்கு திடீரென மின்சாரம் தாக்கி, அவரது உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காவல்துறை விசாரணை

மின்சாரம் தாக்கிய வேகத்தில், சம்பத் மரத்தின் கிளைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டதால் உடலை உடனடியாக மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் மகன் கூச்சலிட்டனர். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கும் மின்வாரியத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, கோவில்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மின்வாரிய அதிகாரிகளின் உதவியுடன் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மரத்தில் கருகிய நிலையில் சிக்கியிருந்த சம்பத்தின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனை-க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாத வகையில், மின் கம்பிகளை மாற்றியமைக்கவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் பணியாற்றும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.