கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்; மருத்துவமனை உரிமம் ரத்து

முத்தூஸ் மருத்துவமனைக்கு அதிகாரிகள் விசாரணைக்கு சென்றனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகின்றது. விசாரணை அதிகாரிகள் கேட்ட ஆவணங்களையும் கொடுக்க மறுத்துள்ளனர்.

Continues below advertisement

கோவையில் கொரொனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்த முத்தூஸ் மருத்துவமனையின் கொரொனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் உரிமத்தை சுகாதார துறை ரத்து செய்துள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. கோவையில் உள்ள நான்கு மருத்துவமனைகள் மீது அதிக கட்டணம் வசூலிப்பதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்து ஆணை வெளியிட்டது. மேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. இதையடுத்து கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன அப்பகுதியில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு  சிகிச்சையில் இருந்த ஷாஜகான் மே 20-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.  இதையடுத்து, அவரது மகன் நதீமிடம் மருத்துவமனை நிர்வாகம் 16 லட்ச ரூபாயை கட்டணமாக கேட்டுள்ளனர். ஆனால் காப்பீடு செய்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் நதீம் கேட்ட போது 15 லட்ச ரூபாய் தான் மருத்துவனை தரப்பில் கோரியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசீதுகளை வாங்கிப் பார்த்த போது அதில் கட்டணமாக 11.55 லட்சம் என கட்டணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக தொகையை நிர்ணயித்து மோசடி செய்ய முயன்றது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் நதீம் புகார் தெரிவித்தார். இந்த புகார்கள் அடிப்படையில்  விசாரணை நடத்த குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டிருந்தார்.


இந்நிலையில் முத்தூஸ் மருத்துவமனைக்கு அதிகாரிகள் விசாரணைக்கு சென்றனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு  ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகின்றது. விசாரணை அதிகாரிகள் கேட்ட ஆவணங்களையும் கொடுக்க மறுத்துள்ளனர். இதனையடுத்து சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அனுமதியை அதிகாரிகள்  ரத்து செய்தனர். இதற்கான உத்திரவினை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவமனைக்கு வழங்கினார். மேலும் அந்த மருத்துவமனையில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை டிஸ்சார்ஜ் செய்யவும்,  விசாரணை முடியும் வரை புதியதாக யாருக்கும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவையில் 4 மருத்துவமனைகள் மீது புகார்கள் வந்துள்ள நிலையில் மற்ற மருத்துவமனைகளில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுதல் கட்டணம் வசூல் செய்த மற்ற மருத்துவமனைகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola