கோவை அருகே தடுப்பூசி டோக்கன் விநியோகிப்பதில் குளறுபடி நடப்பதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.


தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் கோவை கடந்த ஒரு வார காலமாக முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இலனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர் 40,000 கோவி ஷீல்ட் தடுப்பூசிகளும், 8000 கோவாக்சின் தடுப்பூசிகளும் என 48,000 தடுப்பூசிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள 88 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 பள்ளிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் என 124 மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவி ஷீல்ட் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி மையங்களில் 47 மையங்களில் மட்டும் 28 நாட்களுக்கு முன்பு முதல் தவணை கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.


ஒவ்வொரு மையத்திலும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு 100 முதல் 500 தடுப்பூசிகள் வரை வழங்கப்பட்டுள்ளன. தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்காக அதிகாலை முதலே டோக்கன் பெற்று பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 223 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்றுவரை மாவட்டத்தில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 800 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது 27,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.




இந்நிலையில் தடுப்பூசிகள் போடுவதற்கு குறைவான டோக்கன்கள் கொடுப்பதை கண்டித்தும், ஊராட்சி மன்ற தலைவர் தடுப்பூசிகளை காசுக்கு விற்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கோவை மாவட்டம் அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு தடுப்பூசி போடுவதற்கு குறைவான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமரச பேச்சு நடத்தி கலைத்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 250 தடுப்பூசிகள் வீதம் போடப்படுவதாக கூறப்பட்ட நிலையில், 40 டோக்கன்கள் மட்டும் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள் சுகாதாரத் துறையிரிடமும் திமுக ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அரிசிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தடுப்பூசிகளை தனியாருக்கும், கட்சியினருக்கும் பணத்திற்கு விற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.


இதேபோல பல்வேறு இடங்களில் திமுகவினர் தடுப்பூசி டோக்கன் விநியோகம் செய்வதில் குளறுபடிகள் செய்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன