கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஹேண்ட் லூம்ஸ் ஆப் இந்தியா விற்பனையகம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் பாலமுருகன் புதிய விற்பனை நிலையத்தை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி இன்று திறந்து வைத்தார். இதில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கைத்தறி துணிநூல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், ஒன்றரை ஆண்டுகளாக கைத்தறி துணிநூல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நெசவாளர் முன்னேற்றத்திற்க்காக இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. கைத்தறி துறையை பொறுத்த வரை 154 கடைகளில் தமிழகத்தில் 101 இடங்களிலும், பிற இடங்களில் 49 கடைகளும் இருக்கிறது. பழைய மாடல்களை மாற்றி தனிக்குழுக்கள் ஏற்படுத்தி நவீனப்படுத்தி இருக்கின்றோம். 45 கடைக்கள் புனரமைக்க பட்டு இருக்கின்றது.
கைத்தறி துணிநூல் துறையில் கடந்த ஆண்டு 9 கோடி நஷ்டத்தில் இருந்தது. இப்போது 20 கோடி லாபத்துடன் இந்த துறை இயங்கி வருகின்றது. இதில் 10 கோடி ரூபாய் நவீனமயப்படுத்த செலவிடபட்டு உள்ளது. நெசவாளர் முன்னேற்றத்திற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் விரும்பும் வகையில் இந்த துறை செயல்பட்டு வருகிறது. கோ ஆப் டெக்ஸ் துறையும் சிறப்பாக செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் நாளை தோடர்கள் பழங்குடிக்காக தனி சொசைட்டி துவங்கப்படுகின்றது. நெசவாளர்களுக்கு கூலி மிகக்குறைவாக உள்ளது. அதனால் அவர்களுக்கு 10 சதவீத கூலி உயர்வு வழங்கபட்டுள்ளது. ஆனால் அதுவும் போதாது. தமிழகத்தில் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் சார்பில் 18 மில்கள் இயங்கி வந்தது. இப்போது 6 மில்கள் தான் இருக்கிறது, மற்றவை மூடப்பட்டு விட்டது. செஸ் வரியை நீக்க வேண்டும் என கேட்ட போது, உடனே செய்து கொடுக்கப்பட்டது.
டெக்ஸ்டைல் துறையில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் கோவை இருக்கிறது. விருதுநகரில் மெகா டெக்ஸ்டைல் பார்க் துவங்க பிரதமரை கூப்பிட வேண்டும் என பியூஸ்கோயல் கேட்டுக்கொண்டார். கண்டிப்பாக கூப்பிடுவோம் என முதல்வர் தெரிவித்துள்ளார். நூல் விலை உயர்வு தொடர்பாக நிதி அமைச்சர், டெக்ஸ்டைல் அமைத்ததை பார்த்த போது, இறக்குமதி வரி குறைத்தார்கள். இது தொடர்பாக நியாயமான கோரிக்கைகளை உடனே கேட்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழக ஆலைகள் மூடப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “தேசிய பஞ்சாலை கழகம் தொடர்பாக மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்க இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார். அப்போது தேசிய பஞ்சாலைக் கழக ஆலைகளை பார்வையிட சென்ற போது, தனக்கு அனுமதி கொடுக்கவில்லை என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்