தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர ஆர்.எஸ்.எஸ். சார்பில் பேரணி பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து ராஜவீதி தேர்நிலைத் திடல் வரை நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஹெச்.ராஜா, ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் சேர்ந்த ஏழு அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள் என மத்திய அரசால் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. தடைக்கு மறுநாள் தமிழ்நாட்டில் திருமாவளவன், சீமான் ஆகியோர் மனித சங்கிலி நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது. ஆனால் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை விதித்து வந்தார்கள்.


ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுக்க அறிவுறுத்தியது. உச்ச நீதிமன்றம் சென்றார்கள். அங்கும் தடை விதிக்க மறுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி கொடுத்தார்கள். தமிழக அரசு டிஜிபி யாருக்காக இருக்கிறார்? தேசதுரோகிகள், பயங்கரவாதிகளுக்காகவா இருக்கிறார்? பி்.எப்.ஐக்கு வக்கீலாக டிஜிபி இருக்கின்றார். தடை செய்யப்பட்ட இயக்கங்கள் குறித்து பேசக்கூடாது என்கின்றனர். மாநில அரசு தேச துரோகிகளின் அரசு என்பது பல முறை சொல்லி இருக்கின்றேன். நேற்றைக்கு அது  நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவல் துறை மற்றும் அரசாங்கம் பிரிவினைவாத தீய சக்திகள், குறிப்பாக தனி தமிழ்நாடு கேட்கும் தமிழ் தேசிய இயக்கங்கள், திருமாவளவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.


பழனியில் காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அது ரவுடித்தனமான செயல். அந்த தீய சக்திகளை செயல்பட அனுமதித்து விட்டு, தேசபக்த சக்திகளை நசுக்க பார்க்கின்றீர்கள். அது உங்களால் முடியாது. காவல் துறை இன்று பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. தீய சக்திகளின், பிரிவினைவாதிகளின், பயங்கரவாதிகளின் ஏவல் துறையாக காவல் துறை மாறிக் கொண்டிருக்கிறது என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. நான் ஓராயிரம் முறை சொல்லுவேன். பி.எப்.ஐ தேசத்துரோகிகள். அதனால் தான் அவர்கள் தடை செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒரே நாளில் 19 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வன்முறைவாதிகள். ராகுல் காந்தி ஒரு சாதியை இழிவாக பேசினார் என்பதால் வழக்கு தொடுத்தார்கள். அதற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு பெரிய பிரச்சார பீரங்கியே ராகுல் காந்தி தான். அவர் பேசி விட்டு வந்தால் பத்தாயிரம் ஓட்டுக்கள் எங்களுக்கு அதிகமாக தான் விழும். 


பாஜக தலைவர் திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர்கள் 17 பேரும் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யட்டும். அண்ணாமலை சொல்லியது அனைத்தும் பொய். இந்த சொத்து எதுவும் எங்களுடையது இல்லை என தாக்கல் செய்யட்டும். அண்ணாமலை பாஜகவின் மாநிலத் தலைவர். அவர் வெளியிட்டது பா.ஜ.க கட்சியின் கருத்து தான். தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு போயிருக்கிறது. ஆளுநர் கையில் தகவலும், தரவுகளும் இருக்கின்ற காரணத்தால் ஆளுநர் பேசியிருக்கிறார். ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண