கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்திக், மற்றும் நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சயில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசும்போது, "பூங்குழலி கெட்டப்பில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் நிறைய வந்துள்ளதை பார்த்தேன். பூங்குழலி கதாப்பாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வனைத்தான் பூங்குழலிக்கு பிடிக்கும். நல்ல மனிதராக இருந்தால் ஐஸ்வர்யா லட்சுமிக்கு பிடிக்கும். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ஆதித்யா கரிகலான் மற்றும் நந்தினியின் கதையை பார்க்க ஆவலாக இருக்கிறேன். அகநக பாட்டின் வீடியோவை தரமாட்டீங்கறீங்களே? அதை பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 




இதையடுத்து பேசிய ஜெயம்ரவி, ”மிருதன் படத்திற்காக கோவை வந்தபோது ஜோம்பிகள் இடையே படப்படிப்பு முடிந்தவுடன் நிறைய பேர் வந்தனர். அதைப்பார்த்து நான் பயந்தேன். கோவை எனக்கு இரண்டாவது வீடு என கூறலாம். அவ்வளவு பிடிக்கும். அன்பாக பார்க்கும் மக்கள், எந்த எதிர்மறையையும் பார்க்க முடியாது. அவ்வளவு வைப் கோவையில் இருக்கிறது. கோவை மக்களிடமிருந்து நிறைய கற்று கொள்ளணும். ஒரு ஊரு என்பது நிறைய கற்று கொடுக்கும். கோவை தனக்கு நிறைய கற்று கொடுத்துள்ளது. நிறைய கற்று கொள்ள போகிறேன். பொன்னியின் செல்வன் படத்தை வேறு எந்த படத்துடன் ஒப்பிட வேண்டாம். எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த படம், எவ்வளவு தேவையான படம் என ரசிகர்களுக்கு புரியும்.




மணிரத்தினத்தின் நாயகன் இரண்டாம் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். மணிரத்தினம் படத்தில் இருவர் தனக்கு பிடித்தபடம். இப்படத்தில் Never give up attitude என்பது பூங்குழலியிடம் பிடிக்கும். வந்தியதேவனின் நம்பிக்கை தனக்கு பிடிக்கும். அசால்டா இருப்பாங்க, இதுவா இதுவா என்று கேட்டு மயக்கிட்டு போய்ட்டே இருப்பாங்க த்ரிஷா. சினிமா குருவும் அப்பா தான், அப்பாவும் அப்பாதான், அப்பாவிடம் எதுவும் மீறமுடியாது” எனத் தெரிவித்தார்.




நடிகர் கார்த்தி கூறுகையில், ”நா மன்னனாக உள்ளபோது, காதல் துறை அமைச்சர் பதவி பூங்குழலிக்கும், பேரழகுத்துறை அமைச்சர் நந்தினிக்கும், பெண்கள் நலத்துறையை பொன்னியின் செல்வனுக்கு கொடுக்கலாம். என்னை விட நல்லவன் பொன்னியின் செல்வன். சிங்கில்ஸ் நலத்துறை அமைச்சரை நானே எடுத்து கொள்கிறேன். உருட்டு துறை அமைச்சராக நம்பி ஜெயராமிடம் கொடுக்கலாம். ரொமான்ஸ் இல்லாத கதையே நடிக்கமாட்டீங்களா என எனது மனைவி கேட்டார். வந்தியதேவன் எல்லாரையும் பார்த்து ஜொல்லுவிடுகிறான். ஆனால் கண்ணியமானவாக இருக்கிறான்” எனத் தெரிவித்தார். 


இதையடுத்து பேசிய த்ரிஷா, “கோவைக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது. கோவையில் எனக்கு மூன்று விஷயங்கள் பிடிக்கும். கோவை பேசுகின்ற தமிழ் பிடிக்கும். அழகாக இருக்கும். உணவு பிடிக்கும். கோவையில் அமைதி எப்போதும் இருக்கிறது. எப்போதும் கோவையில் பாசிட்டிவிட்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். த்ரிஷா பேசும் போது குறுக்கிட்ட ரசிகர்கள் லியோ திரைப்பட்டதின் அப்டேட் கேட்டு ஆரவாரம் செய்ய நடிகை த்ரிஷா, "லியோவோட சூட்ல இருந்துதான் வாரேன். லோகேஷ், உங்களோட தளபதி ரொம்பவே நல்லா இருக்காங்க. மற்றதை லியோ ஈவன்ட்ல பேசலாம்” எனத் தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து நடிகர் விக்ரம், ”உக்கடத்து பப்பபடமே சுத்திவிட்ட பம்பரமே, விக்ரம்கிட்ட அருள்வாக்கு கேட்காதீங்க” என பாட்டுபாடி ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”பல்வேறு திரைப்படங்களில் உடலை ஏற்றி, இறக்கி நடித்திருந்தாலும் மஜா திரைப்படத்திற்கு மட்டும் தான், தனக்கு பிடித்த உணவை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தேன். மஜா திரைப்படத்திற்காக பொள்ளாச்சியில் நடந்த சூட்டிங்கில் தான் இட்லி 28 வெரைட்டி மற்றும் 50 வகை தோசை இருக்கிறது என நான் தெரிந்து கொண்டேன். ஆதித்ய கரிகாலனை ஏற்று கொண்டதற்கு நன்றி.  ஆதித்யா வர்மா திரைப்படத்தில் காதல் தோல்வியால் பாருக்கு போனான். ஆதித்ய கரிகாலன் காதல் தோல்வியால் போருக்கு போனான். நான் ஒரிஜினல் சூப்பர் பாய். கல்லூரியில் இருந்தே என்னை யாரும் காதலித்தது கிடையாது” எனத் தெரிவித்தார். முன்னதாக விக்ரம் மேடைக்கு வரும்போது எந்த கெட்டப் போட்டாலும் சூட்டாகிறது என தொகுப்பாளர் கேட்க, ”எல்லாம் மேக்கப். அப்புறம் பேரே விக்-ரம் எனப் பதிலளித்தார்.