புதிய பாரதத்தில் கல்வி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் கோவையில் நடைபெறும் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார். அகில பாரதிய ராஷ்ட்ரிய சாக்ஷிக் மாகாஷங் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் சார்பில் கோவை பந்தயசாலையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு தேசிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் மற்றும் நாட்டின் பாரம்பரியத்தோடு சேர்ந்த கல்வி முறை குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தனர்.


இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் பேசியதாவது, "இன்றைய காலகட்டத்தில் உலக அளவில் தொழில்நுட்பம் சார்ந்த அபரீதமான வளர்ச்சி அனைத்து துறைகளிலும் நடந்து வருகிறது. இந்த சூழலில் நமது அறிவு சார்ந்த வளர்ச்சி மிகவும் முக்கியமாகவும். இதற்கு நமது தேசிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் உலகின் தலைசிறந்த நாடாக இருந்தது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு பிறகும், இந்தியா விடுதலை அடைந்த பின்பும் உலகப் பொருளாதாரத்தில் 11ஆவது இடத்தில் தான் நாம் இருந்தோம். இதற்குக் காரணம் மேற்கத்திய நாடுகளின் சிந்தனைகளின் தாக்கம் தான். பிரிட்டிஷ் நாட்டினர் நமது நாட்டை விட்டு வெளியேறிய போதும் காலனி நாடுகளின் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் இருந்துள்ளது. குறிப்பாக கல்வியிலும் இருக்கிறது.


பாரம்பரியமிக்க கல்வி முறை


இதை மாற்றும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டு நமது நாட்டின் பாரம்பரியமிக்க கல்வி முறை அதிலுள்ளது. பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி என்பது அதில் முக்கிய அம்சமாக இருந்த போதும் இந்தியாவின் பாரம்பரியமிக்க கலாச்சார பாரம்பரியம் அதன் ஆன்மாவாக உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் முதல் மூன்று இடத்தில் நாம் இருக்க வேண்டும். அதற்கு கல்வி மற்றும் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமாகும். மத்திய கல்வித்துறை Bhartiya knowledge system என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும். நமது பாரத நாட்டில் தான் உலகத்தில் உள்ள அனைத்தும் ஒரே குடும்பம் என பார்க்கும் அறிவும் சிந்தனையும் எழுந்துள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர், வாசுதேவ குடும்பகம் ஆகிய தத்துவங்கள் தான் நமது ரிஷிகள் நமக்கு வழங்கிய மிக முக்கியமான அறிவாகும். இதற்கு முன்பு மிகக் குறைந்த அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த சூழலில் தற்போது இளைஞர்களின் அறிவுத்திறன் கொண்டு ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


3 டி தொழில்நுட்பத்தில் விண்கலங்களை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பி பெருமை சேர்த்துள்ளனர். நமது மாநிலத்தின் பாடத்திட்டங்களில் தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய பாடங்கள் தவிர்க்கப்பட்டு, பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கம் பற்றிய மிகைப்படுத்துதலும், திராவிட இயக்கங்கள் குறித்த படங்களும் தான் உள்ளது. நமது நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகிறது. குறிப்பாக, வன்முறை சம்பவங்களை காரணம் காட்டி மருது பாண்டியர் சகோதரர்கள் நினைவு தினத்தின் போது சிவகங்கையில் அதற்கான நினைவு நாள் அனுசரிக்கப்படுவதில்லை. புதிய பாரதம் சுவாமி விவேகானந்தரின் கனவாக வலுவான அறிவையும் வேதாந்த பலமும் கொண்ட பாரதமாக இருக்க வேண்டும். கோவிட் காலகட்டத்தில் உலக நாடுகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது. இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசி தயாரித்து அதனை உலக நாடுகளுக்கு வழங்கி காப்பாற்றினர். இதுவே நமது அறிவின் சிறப்பாகும். இன்றைய சூழலில் கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு தடையாக மார்க்சிய சிந்தனை உட்பட பல சிந்தனைகள் உள்ளன. அவற்றை எதிர்கொண்டு பாரம்பரியமிக்க நமது கல்வி அறிவை சீர் செய்ய கல்வியாளர்கள் இந்த கருத்தரங்கில் ஆலோசனைகளை முன் வைக்க வேண்டும்" என பேசினார்.