கோவை விமான நிலையத்தில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீதும், தமிழ் இனத்தின் மீதும், தமிழ் மக்கள் மீதும் மகத்தான அன்பும் மரியாதையும் வைத்துள்ளார். அதனால் தான் இன்று மூன்று தமிழர்கள் இந்திய தேசத்தின் நான்கு மாகாணங்களின் கவர்னராக பணியாற்றும் வாய்ப்பளித்துள்ளார். இதனை ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். ஆளுநராக பொறுப்பேற்ற பின்பு ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறேன். இன்று தமிழகத்திற்கு முதன்முறையாக நான் வருகை புரிந்துள்ளேன்.


ஆளுநரின் செயல்பாடுகள் அந்த மாநில அரசின் அணுகு முறையையும் பொருத்து அமைந்துள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கு இயலாது. ஆளுநர் என்பவர் அதிகாரம் செய்வதற்கு வந்ததாக நாம் கருதக்கூடாது. அரசியல் சட்டத்தின் படி மாநில அரசு செயல்பட வேண்டும் என்பதை நிர்வாகிக்கின்ற பொறுப்பில் ஆளுநர்கள் இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. மணிப்பூர் பொறுத்தவரையில், அங்கு வந்து ஒரு தீர்ப்பினை தொடர்ந்து அங்கு உள்ள இரு வேறு பிரிவினர்களுக்கு இடையே இருந்த பகை மேலோட்டத்திற்கு வந்துள்ளது. அதன் காரணமாகவே அங்கு தனியாக கலவரங்கள் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.


தற்பொழுது அங்கு படிப்படியாக கலவரங்கள் அடங்கி வருகின்றன அரசம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அது ஒரு உணர்வுபூர்வமான கலவரமாக இருக்கக்கூடிய காரணத்தினால் அதனை கட்டுப்படுத்துவது எளிதானது அல்ல. இந்த நாம் அனைவரும் அதனை அரசியல் பார்க்காமல் மீண்டும் மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு, ஒத்துழைப்பு நல்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் மீது ஒருவர் சிறுநீர் கழித்தது குறித்த கேள்விக்கு, “யார் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் குடிதண்ணீரில் மலம் கலக்கப்பட்டுள்ளது, அதை அரசியலாக்குவது சரியாக இருக்குமா? அல்லது மீண்டும் அது போன்று நடைபெறாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்குவது சரியாக இருக்குமா? என்பதை நாம் யோசிக்க வேண்டும்” எனப் பதிலளித்தார்.


அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறையினர் வழக்கு தொடர்ந்திருப்பது குறித்த கேள்விக்கு, ”யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். நான் முதலமைச்சர் ஸ்தானத்தில் இருந்திருந்தால் கண்டிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறிது காலம் பதவியிலிருந்து விலகி இருங்கள் உங்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாத பட்சத்தில் உங்களை மீண்டும் சேர்த்துக் கொள்வேன் என்ற உறுதியைத்தான் தந்திருப்பேன். அப்படி நடப்பது தான் எதிர்காலத்தில் தமிழகத்தில் தார்மீகமான அரசியல் வளர்வதற்கு உதவும். அந்த வகையில் தான் இதனை பார்க்க வேண்டுமே தவிர ஏதோ ஒரு தனிப்பட்ட நபரின் மீது எடுக்கப்படுகின்ற பழிவாங்குகின்ற நடவடிக்கையாக இதனை பார்க்க கூடாது” எனப் பதிலளித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், “பொது சிவில் சட்டம் என்பது இந்து சிவில் சட்டம் அல்ல. அது அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டம். இதனை அனைவரும் ஆதரிக்க வேண்டும். அதுதான் சமுதாயத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும். ஒரு வருட காலமாக பெட்ரோல் டீசல் உயரவில்லை. மற்ற நாடுகளில் எல்லாம் பெட்ரோல் டீசல் விலை கூடி வருகிறது. இந்நேரத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டிய வேண்டிய அரசாங்கமாக நமது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. மிக வேகமாக முன்னேறி வருகின்ற பொருளாதாரமாக நமது பொருளாதாரம் மாறி உள்ளது. இந்த சூழ்நிலையில் தவிர்க்க முடியாமல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தான் நான் அதனை கருத வேண்டும்.


மேற்கு வங்கத்தில் சுதந்திரமான தேர்தல் நடைபெறுகிறதா? அதனை முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் எத்தனை பேர் கண்டித்திருக்கிறார்கள்? பெரியாரின் வாரிசுகள் என்று நாம் நம்மை தம்பட்டம் அடித்து கொள்கிறோம் ஆனால் பெண்களுக்கு சம உரிமை தர வேண்டும் என்று சொல்லுகின்ற முத்தலாக் வழக்கை பொறுத்த அளவில் உடைய நிலை என்ன?, பொது சிவில் சட்டத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்? ஓட்டு வங்கி அரசியலை மட்டுமே நாம் நம்பிக் கொண்டிருப்பது எதிர்காலத்தில் பல்வேறு சமூகங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தாது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.


பல்வேறு கட்சியினர் இணைந்து பாஜகவை எதிர்ப்பது குறித்து கேள்விக்கு, ”ஜனநாயகத்தில் அவர்களுக்கு இருக்கின்ற உரிமையை அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் ஒற்றுமை இருக்கின்றதா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படக்கூடாது என்று சொல்லுவது பாஜக வேலை அல்ல. அவர்கள் அதனை முயற்சிக்கிறார்கள் மக்களும் அதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்திற்காக ஒற்றுமை என்பது வேறு. நாட்டின் நலனுக்கான ஒற்றுமை என்பது வேறு” எனத் தெரிவித்தார்.




-ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.