கோவை மாவட்டத்தில் வரலாறு காணாத வெப்பம் பதிவாகி வருகிறது. இன்று 43 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு கோவை மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்கள்:
கடும் வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக நீர் நிலைகள் மற்றும் மலைப் பிரதேசங்களை நோக்கி சுற்றுலா பயணிகள் படை எடுக்க துவங்கியுள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் நீர் நிலைகளுக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள முண்டந்துறை தடுப்பணையில் தற்போது 12 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் மொத்த உயரம் 40 அடி ஆகும். இங்கு இன்று மதியம் நான்கு மணி அளவில் பேரூர் அருகில் உள்ள தீத்திபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் பிரவீன் (17), தக்சன் (17), கவின் (16), ஆகியோருடன் சஞ்சய் (21) ஆகிய நான்கு பேர் குளிப்பதற்காக சென்றிருந்தனர்.
3 பேர் உயிரிழப்பு:
அனைவரும் குளித்துக் கொண்டிருந்த போது நீச்சல் தெரியாத பிரவீன், கவின், தக்க்ஷன் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து சஞ்சய் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினர், நீரில் மூழ்கிய மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காருண்யா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பள்ளியில் பயிலும் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.