கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயின்றுவரும் மாணவர்கள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இரு குழுக்களாக பிரிந்து சாலையில் மோதிக் கொண்டனர். மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
பேருந்து நிறுத்ததில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நின்றுகொண்டு இருந்தபோது, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் ஒதுங்கி நின்றனர்.
மாணவிகள் மற்றும் பொது மக்கள் முன்பாக அரசு பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டபோது, சாலையில் காரில் சென்ற நபர் ஒருவர் செல்போனில் அக்காட்சிகளை பதிவு செய்துள்ளார். மேலும் மாணவர்கள் மோதிக்கொண்ட காட்சிகளை அந்நபர் சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். மோதல் நடந்த அன்றே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவர்களை எச்சரித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது மாணவர்கள் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆசிரியரை மிரட்டுவது, மேசைகளை உடைப்பது, செல்போன்களைப் பயன்படுத்துவது, மாணவர்களை ராகிங் செய்து நடனம் ஆட வைப்பது, மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசுப் பள்ளி மாணவர்களின் காணொளிகள் தினந்தோறும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. காணொளிகளில் செங்கல்பட்டு, திண்டிவனம் வேப்பேரி, திருச்செங்கோடு, வேலூர் தொரப்பாடி, திருவண்ணாமலை எனப் பள்ளிகளின் பெயர் மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறது. சென்னையில் கல்லூரி மாணவிகள் சாலையில் இரு தரப்பினராக பிரிந்து மோதிக்கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் கோவையில் பள்ளி மாணவர்கள் சாலையில் இரு தரப்பினராக பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இத்தகைய சம்பங்கள் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் இடையே வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்