நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பெண் பயணிடம் அநாகரிகமாக அரசு பேருந்து ஓட்டுநர் பேசிய காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக இருந்து வருகிறது. மேலும் இம்மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லைகளுக்கு அருகே கூடலூர் பகுதி அமைந்துள்ளது. அதேபோல நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லக்கூட்டிய பகுதியாகவும் இப்பகுதி அமைந்துள்ளது. கூடலூர் பகுதியில் தேயிலை உற்பத்தி மற்றும் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் இருந்து வருகின்றன. தேயிலை தோட்டங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிக்குள் பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. போக்குவரத்து வசதி குறைவாக உள்ள இக்கிராமங்களில் உள்ள மக்கள், அரசு பேருந்து சேவையை அதிகம் எதிர்பார்த்து உள்ளன.



நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு நாள்தோறும் அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வரும் என்பதால், பொதுமக்கள் நீண்ட நேரம் பேருந்துகளுக்கு காத்திருக்க வேண்டிய நிலை இன்று வரை இருந்து வருகிறது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து அய்யங்கொல்லி சென்ற அரசு பேருந்தை பெண் பயணி கையை நீட்டி நிறுத்த முயற்சித்துள்ளார். அப்போது பேருந்து நிற்காமல் சென்றுள்ளதாக தெரிகிறது.


பின்பு குழந்தையுடன் சென்ற பெண் பயணி ஓட்டுனரிடம் ஏன் பேருந்து நிறுத்தவில்லை என கேட்ட பொழுது பேருந்தில் இருந்து இறங்கிய ஓட்டுனர் பதில் கூறாமல் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் தொடர்ந்து பேருந்து நிற்காததை குறித்து கேட்டபோது, ’உன் அப்பன் வீட்டு வண்டியா?’ என ஓட்டுநர் பேசியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி குழந்தைகள் அரசு பேருந்தில் ஏறி இறங்க வேண்டிய இடத்தில் பேருந்தை நிறுத்தச் சொல்லிக்கேட்ட போது, நடத்துனர் அநாகரீகமாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பெண் பயணியிடம் ஓட்டுனர் அநாகரிகமாக உன் அப்பன் வீட்டு வண்டியா என பேசிய வீடியோ பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அநாககரிகமாக பேசிய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.