கோவை சுந்தராபுரம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது 21 வயது மகன் பிரசாந்த். இவர் தனியார் நிறுவனத்தில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். இதனிடையே பிரசாந்த் செட்டிபாளையம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த மகாதேவன் என்பவரது மகள் தன்யா (18) என்ற இளம் பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு அடுத்த ஆண்டு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் சில நாட்களாக பிரசாந்திடம் பேச, தன்யாவிற்கு தனது செல்போனை மகாதேவன் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 5 ம் தேதி தன்யாவின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு நள்ளிரவில் வாழ்த்து கூற பிரசாந்த் தனது நண்பர்களான தரணி பிரசாத், குணசேகரன் மற்றும் அபிஷேக் ஆகிய மூவருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் தன்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது நான்கு பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. நள்ளிரவு 12 மணியளவில் தன்யாவின் வீட்டுக் கதவை பிரசாந்த் தட்டிய போது, அவரது உறவினரும் டாக்ஸி ஓட்டுனருமான விக்னேஷ் (29) மற்றும் தன்யாவின் தந்தை மகாதேவன் (40) கதவை திறந்துள்ளார். அப்போது பிறந்த நாள் வாழ்த்து சொன்ன பிரசாந்த் குடிபோதையில் இருந்ததால், விக்னேஷுக்கும் பிரசாந்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில், பிரசாந்த் விக்னேஷை கட்டையால் தாக்கியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் அங்கிருந்த கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தியுள்ளார். இதனால் சரிந்து விழுந்த பிரசாந்தை அவரது நண்பர்கள் இரு சக்கர வாகனத்திலேயே அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் தீர்ந்ததால், ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பிரசாந்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக செட்டிப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தன்யாவின் உறவினரான கால் டாக்ஸி டிரைவர் விக்னேஷ் (29 என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே பிரசாந்த் உயிரிழந்ததை அறிந்த தன்யா மிகுந்த மனவேதனையில் விரக்தியுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த செட்டிபாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தன்யாவின் உடலை உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலன் உயிரிழந்த விரக்தியில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)