கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கணபதி ராஜ்குமார், “கடந்த 16 ம் தேதி முதலமைச்சர், அமைச்சர்கள், அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு கோவை விமான நிலையத்தில் விரிவாக்கம் சம்பந்தமான நில எடுப்பு பணிகள் நிறைவடைந்து விட்டது. ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிற்கு மத்திய அரசிற்கு முன் நுழைவு அனுமதி அளிக்கப்பட்டு, அதனுடைய நகல் நேற்றைய தினம் நமது மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வந்துவிட்டது. கோவை விமான நிலையம் விரிவாக்கத்தை பொறுத்தவரை 2010ல் நில எடுப்பு பற்றி அப்போதைய திமுக அரசு முதன்முதலில் ஒரு அரசாணையை வெளியிட்டது. பிறகு இத்தனை வருடங்கள் கழித்து இப்பொழுது மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முடிவுற்றிருக்கிறது.
தேர்தல் முடிந்த பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே நல்ல முடிவெடுத்து இந்த நல்ல செய்தியை கோவை மக்களுக்கு முதலமைச்சர் பரிசாக அளித்திருக்கிறார். அதேபோல இந்த விமான நிலைய விரிவாக்கத்தில் தொழில்துறை அமைச்சரின் பங்களிப்பும் மிக முக்கியமானது. தமிழக முதலமைச்சர் சொன்னபடி வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார், இனி மத்திய அரசு தான் மிக விரைவாக இதை செய்து தர வேண்டும். மெட்ரோ பணிகளுக்கான அனைத்து தகவல்களையும் திரட்டி மத்திய அரசிடம் கொடுத்து விட்டோம் ஆனால் மத்திய அரசு அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் கொடுத்து விட்டோம் இனி அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்து அவர்களது பங்களிப்பை சொன்னால் நாங்கள் தயாராக உள்ளோம். கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டு விட்டோர். அதற்கு டிசைன் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது டிசைன் செய்தால் தான் எஸ்டிமேட் போட்டு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும்” என்றார்.
ஆட்சியர் பேட்டி
இதையடுத்து பேசிய ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, “கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தியது. 662 ஏக்கர் இதில் 468.23 ஏக்கர் பட்டா நிலமாக உள்ளது. 97% பணிகள் முடிந்துவிட்டது. 456 ஏக்கர் நிலத்திற்கு நாம் தற்போது அனுமதி கொடுக்கிறோம். மீதம் இருக்கின்ற நிலத்தில் பிரச்சனை உள்ளது. அதில் நீதிமன்ற வழக்கில் ஒரு எட்டு ஏக்கர் நிலம் உள்ளது. மீதி ஓஎஸ்ஆர் நிலம், மூன்று ஏக்கர் அதுபோக இரண்டு ஏக்கர் மேலும் கையகப்படுத்துவதற்காக மூன்று ஏக்கர் என இறுதியாக உள்ளது. இந்த மாதக் கடைசிக்குள் இதனை முடித்து விடுவோம் என டார்கெட் வைத்துள்ளோம். புறம்போக்கு நிலம் 29 ஏக்கர் உள்ளது அதில் அதில் 20 ஏக்கர் நிலத்தை நாம் தற்போது ஒப்படைக்கிறோம். பிரச்சனைக்குரிய இடமாக உள்ள 9 ஏக்கர் நிலத்தில் இறுதி அரசாணை தமிழக அரசிடம் இருந்து வந்த பிறகு அந்த நிலங்களையும் ஒப்படைப்போம்.
விமான நிலைய விரிவாக்கத்திற்காக தற்போது வரை 1849 கோடி இழப்பீடாக கொடுத்துள்ளோம். நீதிமன்றத்தில் வழக்கு நிலவையில் இருக்கும் பொழுது நாம் எப்பொழுது கையக படுத்தினோமோ அதிலிருந்து பணம் கட்ட வேண்டி இருக்கும் அதனால் அந்த பணத்தை மிச்சப்படுத்துவதற்காக நாம் வழக்குகளில் தொந்தரவு செய்வதில்லை. பைபாஸ் சாலையில் இருந்து ஒரு சாலை விமான நிலையத்திற்கும் அவிநாசி சாலையிலிருந்து ஒரு சாலை விமான நிலையத்திற்கும் வர வேண்டியது உள்ளது என தெரிவித்த அவர் அதற்கான நிலங்களுக்காக விமான நிலைய இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். காவல்துறை சார்பிலும் ஒவ்வொரு விஷயங்கள் ஆராயப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியிலும் இங்குள்ள சில துறைகளை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.