கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி (எண்.20) மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி (எண்.21) ஆகியவை உள்ளன. கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 10,41,349 பேர், பெண் வாக்காளர்கள் 10,64,394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர். அதில் திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.


பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி


பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஆண் வாக்காளர்கள் 7,71,53 பேர், பெண் வாக்காளர்கள் 8,21,370 பேர், மூன்றாம் பாலினத்தவர் 295 பேர் என மொத்தம் 15,93,168 வாக்காளர்கள் உள்ளனர். பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் ஒன்பது சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் திமுகவை சேர்ந்த ஈஸ்வரசாமி , அதிமுகவை சேர்ந்த கார்த்திகேயன், பாஜகவை சேர்ந்த வசந்தராஜன் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.


வாக்களிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்


கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 225 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 78 மையங்களில் 1715 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 146 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறியப்பட்டுள்ளது. இந்தப் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, ராணுவத் துறையினர் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு மற்றும் வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மலைப்பகுதிகளிலும் வாக்குச்சாவடிகள் இருப்பதால் இங்கு வனத்துறையின் ஒத்துழைப்போடு பேருந்துகள் மற்றும் ஜீப்புகளின் மூலம் வாக்காளர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் பணியாற்றுவதற்காக வாக்குப்பதிவு முதன்மை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 14,772 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் கருவி, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், கைவிரலில் வைக்கப்படும் மை, வாக்காளர் பட்டியல், வேட்பாளர்கள் பட்டியல் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.