கடந்த 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  வருமானத்திற்கு அதிகமாக 58.23 கோடி ரூபாய் சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு துறையினர் 59 இடங்களில் சோதனை நடத்தினர். 3928 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலுமணி அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ். பி. வேலுமணி வீட்டில் 13 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது.


இந்த சோதனையில் 11.153 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி, கணக்கில் வராத 84 இலட்சம் ரூபாய் பணம், கைப்பேசி, வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கிரிப்டோ கரன்சிகளில் 34 இலட்சம் ரூபாய் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சோதனை முடிந்த பிறகு அதிகாரிகள் வெளியே சென்ற போது, அதிமுக தொண்டர்கள் தடுத்து நிறுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் அதிகாரிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். 




இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி கூறுகையில், "எனது வீட்டில் இரண்டாவது முறையாக திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் சோதனை நடத்தி இருக்கிறது. என்னுடைய வீடு, சகோதரர் வீடு, சம்பந்தமில்லாதவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி இருக்கின்றது. 
யார் திமுகவை யார் அரசியல் ரீதியாக  கடுமையாக எதிர்த்தார்களோ அவர்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. தொலைக்காட்சிகளில் செய்திகள் தவறாக போடப்படுகிறது. பணம் பிடிக்கப்பட்டதாக தவறான தகவல்கள் போடப்படுகிறது. ஒரு ரூபாய் கூட பணம், தங்கம் கைப்பற்றப் படவில்லை. கடந்த முறையும் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த முறையும் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த சோதனையை சட்ட ரீதியாக சந்திப்போம். சோதனைகள் மூலம் எங்களை முடக்க திமுக தலைவர் ஸ்டாலின் நினைக்கின்றார்.




சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் வெற்றி பெற்றது தான காழ்ப்புணர்ச்சிக்கு காரணம். கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருப்பது காரணமாகவே இரண்டாவது முறையாக இந்த சோதனை என் வீட்டில்  நடத்தப்படுகிறது. என்னுடன் வாக்கிங் வருபவர்கள், பழகுபவர்கள் வீடுகளில் கூட சோதனை நடத்தி இருக்கிறார்கள் . ஒரு சில இடங்களில் சோதனை யாரென்று எங்களுக்குத் தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலின் மேடைகளில் பேசும் போது அனைவருக்கும் பொதுவானவர் என்கின்றார். ஆனால்  அவருடைய நடவடிக்கை முழுமையாக பழிவாங்கும் நடவடிக்கையாகவே இருக்கின்றது. குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர ஸ்டாலின் நினைத்தார். நாங்கள் எங்கள் கட்சிக்கு ஆதரவாக இருந்தது  ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. இது அவர்களுக்கு கோபம். 




உள்ளாட்சித் தேர்தலில் திமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது. இந்த முறைகேடுகளை ஆய்வு செய்வதோ அல்லது சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தினாலோ தெரியவரும். மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் 85 ஆயிரம் ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரானோ நோயாளிகள் வெறும் 70 பேர் மட்டுமே இருந்தனர். கோவை மாவட்டத்தில் திமுக வெற்றி பெறும் சூழலே கிடையாது. ஆனால் கோவை மாவட்டத்தில் திமுக வெற்றி பெற்று விட்டது. எந்த வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்த சோதனையை சட்ட ரீதியாக நாங்கள் எதிர் கொள்வோம். காவல் துறை வெறும் ஏவுகணை தான். ஆனால் காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். இவர்களால் வேறு ஊருக்கு மாற்றம் மட்டுமே செய்ய முடியும். எனவே காவல் துறையினர் திமுகவினருக்கு அடி பணியக் கூடாது.




இந்த அரசு முழுமையாக காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது. வெளிநாடுகளுக்கு சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தான் சென்று வந்தேன். மருத்துவ ரீதியாக தவிர வெளிநாடு சென்றதில்லை. குடும்பம் குறித்து தவறாக தொலைக்காட்சிகளில் போடுகின்றனர். எனது  சகோதரர் வெளிநாட்டில் 25 ஆண்டுகளாக இருக்கிறார். குடும்ப நிகழ்ச்சிக்கு சென்று வந்ததை தவறாக போடுகின்றனர். சோதனையில் எனது வீட்டில் ஒரு ரூபாய் கூட கைப்பற்றவில்லை. இதை அதிகாரிகளே எழுதி கொடுத்துச் சென்றுள்ளனர். இது முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடத்தப்பட்டது" என அவர் தெரிவித்தார்.