கோவை ஒசூர் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொணடனர். இந்த கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து வருகின்ற 9 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், அதிமுக அமைப்பு தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலில் 100 சதவீதம் வெற்றி பெறுதல் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தாக்கியும், காவல் துறையினரை தாக்கியும் பேசினர். பொள்ளாச்சி எம்.எல்.ஏ ஜெயராமன் பேசும் போது, ”திமுக ஆட்சி பத்து அமாவாசைக்குள் பஞ்சராகி விடும். பல கட்சிகள் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. இது மக்களால் தொடங்கப்பட்ட கட்சி. பல பொய்களை கூறி ஆட்சியை பிடித்தது திமுக. சொன்னதை செய்யாத திமுகவை கண்டித்து நாளை மறுதினம் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதிமுககாரன் அடி வாங்குவதில் விண்ணை தொட்டு நிப்பான். அடிப்பதில் ஆகாயத்தை தாண்டி அடிப்பான். 6 மாத காலம் பொறுமையாக இருந்த காரணத்தினால் நாங்கள் என்ன பிஸ்கோத்து பார்ட்டிகளா? நாங்கள் சிலிர்த்து எழுந்தால் அதிமுக எதிரிகள் தாங்கமாட்டார்கள். எந்த ஊரில் இருந்து எலி வந்தாலும் சரி, பெருக்கான் வந்தாலும் சரி. எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை. எங்களுக்கு எஸ்.பி.வேலுமணி ஒருவரே போதும்” என அமைச்சர் செந்தில்பாலாஜியை குறிப்பிட்டு விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாகவும், வளர்ந்ததாகவும் வரலாறு இல்லை. இந்த இயக்கத்தை காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறான் என தெரியாத சூழ்நிலை தான் இருக்கிறது. அதிமுக எதற்கும் அஞ்சாது. அச்சப்படாது. எதிரிகளை பத்து அமாவாசைக்குள் வீழ்த்திக் காட்டுவோம். 10 அமாவசைக்குள் அதிமுக அரியணை ஏறும்” என அவர் தெரிவித்தார்.
இதனிடையே காவல் துறையை கண்டித்து அதிமுக அலுவலகம் முன்பாக அதிமுகவினர் திடீரென போராட்டம் நடத்தினர். காவல் துறையினரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் அதிமுக தொண்டர்கள் நிறுத்தியிருந்த வாகனங்களை, காவல் துறையினர் அப்புறப்படுத்த முயன்றதை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்