சிலர் விலங்குகள் மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்பார்கள். கிராமங்களில் கால்நடைகள் மீது பாசம் வைத்திருப்பார்கள். நகரங்களில் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் மீது சில மனிதர்கள் வைத்திருக்கும் பாசம் நம்மை திகைக்க வைக்கும். குறிப்பாக நாய்க்குட்டி, பூனைக்குட்டிகள் மனிதர்களின் அளவு கடந்த அன்பைப் பெறுகின்றன. மனிதர்கள் காணாமல் போனால் போலீசாருக்கு புகார் செய்வது, கண்டுபிடிப்பதபற்காக போஸ்டர் ஓட்டுவது, செய்தித்தாளில் விளம்பரம் கொடுப்பது இயல்புதான். ஆனால் கோயம்புத்தூரில் ஒருவர் தான் அன்போடு வளர்த்து வந்த பூனை காணாமல் போய்விட்டது என்று போஸ்டர் ஒட்டி இருக்கிறார். பூனையை காணவில்லை என அதன் உரிமையாளர் அடித்துள்ள போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.






அந்த போஸ்டரில், "பூனை காணவில்லை" என்ற பெரிய தலைப்புடன் பூனை படம் போடப்பட்டுள்ளது. பூனையின் பெயர் 'ஜெசி' என்றும் வயது 6 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. "அடையாளம் உதட்டில் மச்சம்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 29 ஆம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, "நீங்கள் பூனையை கண்டால் கீழ்கண்ட தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்" என்று எழுதி இரு தொலைபேசி எண்கள் கொடுக்கப் பட்டுள்ளன. அதற்கு கீழே பூனையை கண்டுபிடித்து தருபவருக்கு 5000 ரூபாய் பரிசுத்தொகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் கோயம்புத்தூரில் சில இடங்களில் ஓட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ஒட்டியவர் ராமநாதபுரத்தை சேர்த்தவர் என்பது கூடுதல் தகவல்.






இதுபோன்று ஏற்கனவே சென்ற மாதம் 'லட்டு' என்னும் பெயர் கொண்ட 1.3 வயது கொண்ட பூனையை காணவில்லை என்று ஹரி என்பவர் இதே போன்று ஒரு போஸ்டர் வைரலானது. அந்த பூனைக்கு அடையாளமாக முகத்தில் மூக்கு இருக்கும் என்று எழுதப்பட்டு இருந்தது குறித்து சமுக வலைதளங்களில் பலரும் பேசினர். அந்த பூனையை கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் காணவில்லை என்றும், அதனை கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.1000 சன்மானம் வழங்கப்படும் எனவும் அதன் உரிமையாளர் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.