நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் டி 23 புலியை பிடிக்கும் பணிகள் தொடர்பாக தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”நேற்று மாலை வரை டி 23 புலி தொடர்பாக எந்த தகவலும் இல்லை. இன்று காலை முதல் புலி நடமாட்டம் இருக்கும் வனப்பகுதிகளில் கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. புலி இருப்பதாக கணிக்கப்படும் பகுதியில் 6 கேமரா இருந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு அதிகரித்து 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புலியை கண்டறிய இது தான் சிறப்பானதாக இருக்கும். புலியின் தடயங்கள் தொடர்பாக வனங்களில் உள்ள புதர்கள், பள்ளங்கள் ஆகியவற்றை வன ஊழியர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.
புலியின் காலடி தடங்கள் இருந்தால் தான் அதை பின்தொடர்வது எளிதாக இருக்கும். 50 வன ஊழியர்கள் இந்த வனப்பகுதியில் ரோந்து பணியில் இருக்கின்றனர். 6 மருத்துவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர். கூடலூர், மசினகுடி பகுதிகளிலும் வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கேமராக்களிலும் டி 23 புலி தொடர்பாக எந்த தகவலும் இல்லை. சிங்காரா பகுதியில் தற்போது சில இடங்களில் T23 புலியின் காலடி இருப்பதாக தகவல் வந்துள்ளது. அந்த இடத்திற்கு குழுவினர் விரைந்துள்ளனர். கடைசியாக 3 நாட்களுக்கு முன்னர் தான் நேரடியாக டி 23 புலி பார்க்கப்பட்டது. அப்போது புதர்கள் , மூங்கில் புதர்கள் இருந்ததால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் நேரடியாக பார்க்கவில்லை.
வனப்பகுதியில் 4 பரண்கள் அமைக்கப்பட்டு 3 நாட்களாகி விட்டது. புலி வெளியில் வந்து 3 நாட்களாகி இருப்பதால் வெளியே வர வாய்ப்பு இருக்கிறாது. புலி பதுங்கி இருந்தாலும், கடைசியாக சாப்பிட்டு 3 நாட்களான நிலையில் மீண்டும் வெளியே வர வாய்ப்பு உள்ளது. புலியின் டி.என்.ஏ தொடர்பான தகவல்கள் நம்மிடம் இல்லை. டி.என்.ஏவை எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது” என அவர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து சிங்காரா பகுதிக்கு புலி இடம் பெயர்ந்த நிலையில், குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்று, உடல் பாகங்களையும் சாப்பிட்டது. டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். டி 23 புலியை பிடிக்கும் பணிகள் இன்று 13 வது நாளாக நடைபெற்றது.