நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா , கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வந்த டி 23 புலியை பிடிக்கும் பணிகள் ஆப்ரேசன் டி 23 என்ற பெயரில் நடைபெற்று வந்தது. 21 நாட்களாக நீலகிரி மாவட்ட வனத்துறையினர் இரவு பகலாக புலியைத் தேடி வந்த நிலையில், இன்று புலி வனத்துறையிடம் சிக்கியது. மாயார் அருகே பிற்பகலில் டி 23 புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட புலியை வனத் துறை அமைச்சர் ராமசந்திரன் நேரில் பார்வையிட்டார். இதையடுத்து மசினகுடி சோதனை சாவடியில்  வனத் துறை அமைச்சர் ராமசந்திரன், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை வனப்பாதுகாவர் சேகர் குமார் நீரஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.




அப்போது பேசிய வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், “இன்று மதியம் 2.30 மணிக்கு மசினகுடி வனப்பகுதியில் ஆட்கொல்லி புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கும்கி யானை மீது அமர்ந்து மயக்க ஊசி செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட வனத்துறை வரலாற்றில் இதற்கு முன்பு 3 ஆட்கொல்லி புலிகள் சுட்டு கொல்லப்பட்டு இருக்கின்றது. முதல் முறையாக இந்த புலி உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு டி 23 புலியை மைசூர் உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புலியின் காயங்கள் முழுமையாக குணமடைந்த பின்னரே, அதை மைசூரிலேயே வைத்திருப்பதா அல்லது வண்டலூர் உயிரியல் பூங்கா கொண்டு வருவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.




டி 23 புலி 13 வயதான புலி என்பதால் வனத்தில் இடத்தை பிடிக்கும் போட்டியில்  இளம்புலிகள் இந்த புலியை தாக்கி இருக்கின்றது. அதனால் புலியின்  உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது. உரிய மருத்துவ சிகிச்சைக்காகவே மைசூர் உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டது” என அவர் தெரிவித்தார்.




இதனை தொடர்ந்து பேசிய முதன்மை வனபாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், ”இன்று ஓரே ஒரு முறை மட்டுமே டி 23 புலிக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. நேற்று இரவு மயக்க ஊசி போடவில்லை. இரவு ஊசி செலுத்த முயற்சி செய்தோம். ஆனால் மயக்க ஊசி செலுத்த முடியவில்லை” என அவர் தெரிவித்தார்.




பின்னர் பேசிய முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, ”அரசின் முக்கியமான நோக்கம் இந்த புலி உயிருடன் இருக்க வேண்டும் என்பது தான். இந்த அரசின் முடிவு புலியை கொல்லக்கூடாது என்பதால், மிக எச்சரிக்கையாக புலி பிடிக்கப்பட்டது. புலியின் இதயதுடிப்பு உட்பட உடல் நிலை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. 4 வனத்துறை மருத்துவர்கள் T23 புலியுடன் மைசூர்  செல்கின்றனர்” என அவர் தெரிவித்தார்.