தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் யானைகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள் கன்னியாகுமரியில் துவங்கி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்கள் வழியாக குஜராத் மாநில எல்லையில் முடிவடைகிறது. பல்லுயிர் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு தொடர்ச்சி மலைகளில், காட்டு யானைகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இம்மலைகள் மற்றும் அதையொட்டியுள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் உள்ளன. காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நாள்தோறும் பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடியவை. அதேபோல பருவகாலத்திற்கு ஏற்ப இடம் பெயர்ந்து செல்லும் வகையில் வலசை செல்லும் தன்மை கொண்டவை. அவ்வகையில் காட்டு யானைகள் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் வலசை செல்வதும் உண்டு. யானைகள் நிலையாக ஓரிடத்தில் இருப்பதில்லை.
இதன் காரணமாக அந்தந்த மாநிலங்கள் சார்பில் யானைகள் கணக்கெடுப்பு தனித்தனியாக நடத்தப்படும் போது, யானைகளின் உண்மையான எண்ணிக்கை தெரிவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனைக்கருத்தில் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்கள் இணைந்து ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடந்த, 2017 ம் ஆண்டு இதேபோன்று யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது, மாநில வனத்துறை சார்பில் இன்று முதல், மூன்று நாட்களுக்கு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு குழுவிலும், வனத்துறை ஊழியர், வேட்டை தடுப்பு காவலர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அல்லது கல்லுாரி மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் நேரடி மற்றும் மறைமுக கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த, 2017 ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2,761 யானைகள் இருந்தன. தமிழ்நாட்டில் 26 வனச்சரகத்தில், 708 பிளாக்குகள் இருப்பதாக கணக்கிட்டுள்ளது. கோவை வனக்கோட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகத்தில், 26 பிளாக்குகள் உள்ளன. கோவை வனக்கோட்டத்தில், 40 குழுக்கள் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளன.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,‘‘குழுவினர் முதல் நாளில் யானைகளை நேரில் பார்த்து பதிவு செய்வர். தினமும், 15 கி.மீ., வரை பயணித்து குழு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும். யானைகளின் வயது, பாலினம் உள்ளிட்டவை பதிவு செய்யப்படும். இரண்டாவது நாளில், இரு கி.மீ., தூரம் அடையாளம் காணப்பட்ட குறுக்கு வழிகளில் நடந்து, யானைகளின் சாணம் மூலம் மறைமுக கணக்கெடுப்பு நடத்தப்படும். மூன்றாவது நாளில், நீர்நிலைகளுக்கு யானைகள் தண்ணீர் குடிக்க வரும் போது, அவற்றை அடையாளம் காண நீர்நிலைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரே நேரத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படுவதால் காட்டு யானைகளின் துல்லியமான எண்ணிக்கை கண்டறியப்பட வாய்ப்புள்ளது. இந்த கணக்கெடுப்பின் போது கிடைக்கப்பெறும் யானைகள் குறித்த தகவல்கள் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்