பரம்பிக்குளம் அணை கேரளம் மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும் பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணையானது தமிழக முதல்வராக இருந்த காமராசர் காலத்தில் கட்டப்பட்டது. கேரள மாநிலத்திற்குள் இந்த அணை அமைந்திருந்தாலும், இதன் செயல்பாடுகளையும், பராமரிப்பையும் தமிழக அரசு கவனித்துக் கொண்டு வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வரும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தில் இந்த அணை முக்கிய பங்காற்றி வருகிறது.


மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிக மழை பெய்யும் இடமான சோலையார் அணையின் உபரிநீர், சேடல்டேம் வழியாக சென்று தூணக்கடவு வழியாக சென்று பரம்பிக்குளம் அணைக்கு சென்று சேருகிறது. 71 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் போது,  கேரளாவில் உள்ள சாலக்குடி ஆற்றுக்கு சென்று கடலில் கலக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு 1 0 மணி அளவில் அணையில் உள்ள மூன்று ஷட்டர்களில் நடுவில் இருந்த ஒரு ஷட்டர் கழன்று விழுந்து, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மதகில் இருந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேறி வருகிறது.




இது குறித்து பொதுப்பணி துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததனர். இதன் பேரில் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் முனராய் ஜோஷி மற்றும் தமிழக, கேரளா பொது பணித் துறை அதிகாரிகள் தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர்ரை கட்டுபடுத்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மதகில் இருந்து தண்ணீர் அதிகளவு வெளியேறி வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைக்காடி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


சாலையில் ஏற்பட்ட குழியில் சிக்கிய பேருந்து


கோவை தடாகம் சாலையில் உள்ள இடையர்பாளையம் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை தடாகம் சாலையில் சிவாஜி காலனி முதல் கேஎன்ஜி புதூர் வரை தற்போது குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பிரதான மாநில நெடுஞ்சாலையான தடாகம் சாலை தோண்டப்பட்டு பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. 


இந்த சாலையில் இடையர்பாளையம் அருகே காந்தியடிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வாசலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த குழிகள் குறித்த எந்த அறிவிப்பும் முறையாக வைக்கப்படவில்லை. இதை அறியாமல் அவ்வழியே வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக குழியில் சிக்கியது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டு பேருந்தை கிரேன் மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 




தடாகம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகள் காரணமாக ஏற்கனவே அப்பகுதியில் கடும் தூசி பிரச்சனை இருந்து வரும் நிலையில் தற்போது சாலைகளில் அடிக்கடி பள்ளம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த சாலை கடுமையாக சேதமடைந்து காணப்படும் நிலையில் தற்போது குடிநீர் குழாய் பணிகளும் தொடர்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது. பேருந்து குழிக்குள் சிக்கியதை அடுத்து, தடாகம் சாலையில் வாகன போக்குவரத்தை அப்பகுதி மக்களே மாற்றி அமைத்து வருகின்றனர்.