டெல்லியில் அதிமுக உட்கட்சி விவாகரம் குறித்து பேசியதாக கூறுவது தவறானது என்றும், திமுகவில் முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக விலகுவது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். ஓபிஎஸ் உடன் மோதல் தொடரும் நிலையில், அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறித்து ஈபிஎஸ் விவாதித்ததாக கூறப்படுகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோருடன் பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 


இதையடுத்து எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”இன்று உள்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து அவரிடத்தில் முக்கியமான சில விஷயங்களை பேசினோம். அதில் கோதாவரி - காவரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தையும்  செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் போதை பொருள் அனைத்து பகுதியிலும் தடையில்லாமல் கிடைக்கிறது. இது தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.




திமுகவிலிருந்து முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவரும் விலகுவது தான் திராவிட மாடல். ஆ.ராசா கீழ்தரமான, இந்து மதத்தை புண் படுத்தும் விதமாக பேசுவது கண்டிக்கதக்கது. ஆ.ராசா குறிப்பிட்டு பேசிய அந்த வார்த்தை அவரது கட்சி தலைவரின் குடும்பத்துக்கு பொருந்துமா? அல்லது அவரது மருமகன் திருச்செந்தூரில் யாகம் நடத்தினாரே அவருக்கும் பொருந்துமா என்று கேட்டேன். இன்னும் அவரது கட்சி தலைவர் உரிய பதிலளிக்கவிக்லை” என அவர் தெரிவித்தார்.


மேலும் அதிமுக உட்கட்சி விவாகரம் குறித்த கேள்விக்கு, ”அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு  உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரும் போது நீங்களே தெரிந்து கொள்வீரகள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அதை பற்றி பேசினால் அது வழக்கிற்க்கு தடையாக இருக்கும். நான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவாகரம் குறித்து பேசியதாக கூறுவது தவறானது. விடியா திமுக ஆட்சியில் எதும் நடைபெறாமல் இருப்பது குறித்தும், பல்வேறு கோரிக்கைகளை வைக்க தான் டெல்லி சென்றேன். தமிழகத்தில் காய்ச்சல் பரவலைக் தடுக்க இந்த அரசு விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் மருத்துவ குழு உரிய முறையில்  ஆராய்ந்து காய்ச்சல் பரவலைக் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண