கேரளாவைச் சேர்ந்த ஜானி தாமஸ் என்பவர் ஜானி சகாரிகா என்ற பெயரில் திரைப்படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் வந்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு மோகன்லால் நடித்த தாண்டவம், 2018ல் வெளியான நான்சென்ஸ் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை அவர் தயாரித்துள்ளார்.


பல்வேறு படங்களுக்கு விநியோகஸ்தராகவும், பைனான்சியராகவும் அவர் இருந்து வந்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு கத்தாரில் பணி புரிந்து வந்த கோவை வடவள்ளி குருசாமி நகரைச் சேர்ந்த சேர்ந்த துவாரக் உதயசங்கர் என்பவர் ஜானிக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது நிறம்-2, கேம்பஸ் உள்ளிட்ட 5 படங்களை தயாரிக்கப் போவதாகவும், அந்த படங்களுக்கு முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் எனவும் துவாரக்கிடம் ஜானி தாமஸ் மற்றும் அவரது மகன் ரானி ஜானி ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.


மோசடி வழக்கில் கைது:


இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக 75 லட்சம் ரூபாயை துவாரக் முதலீடு செய்துள்ளார். இதை வைத்து ’நான்சென்ஸ்’ என்ற திரைப்படத்தை ஜானி தாமஸ் தயாரிக்கத் தொடங்கி உள்ளார். இரண்டாம் கட்டமாக இரண்டு கோடி ரூபாயை துவாரக் ஜானியிடம் வழங்கியுள்ளார். 2018ம் ஆண்டு பணத்தை திரும்ப கேட்ட போது, படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறிய ஜானி மற்றும் அவரது மகன் ரான் ஜானி ஆகியோர், சில நாட்கள் கழித்து 50 லட்சம் ரூபாயை மட்டும் லாபம் எனக் கூறி கொடுத்துள்ளனர். மீதி பணத்தை திரும்ப கேட்ட போது, காலம் தாழ்த்தி வந்துள்ளனர். ஜானியின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், பின்னர் பணத்தை தருவதாகவும் துவாரக்கிற்கு உறுதியளித்துள்ளனர்.


2021ம் ஆண்டு ஜானியின் மனைவி உயிரிழந்து விட்டார். அதன்பின், ஜானியும் அவரது மகன் ரானியும் பல சொத்துக்களை வாங்கியது துவாரக்கிற்கு தெரிய வந்தது. தற்போது கனடாவில் வசித்து வரும் துவாரக், இது தொடர்பாக அந்நாட்டு தூதரகம் மூலமாக பரிந்துரை பெற்று, கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் ஜானி மற்றும் ரானி ஜானி ஆகியோர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.


இந்நிலையில் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற ஜானி தாமஸை கொச்சியில் உள்ள நெடும்பாசேரி விமான நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம், கொச்சி காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் இது தொடர்பாக கோவை காவல் துறையினௌக்கு கொச்சி காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில், நேற்று ஜானி தாமஸை கைது செய்த கோவை காவல் துறையினர், அவரை கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.