கோவை சிவானந்தா காலனி பகுதியில் பாஜக மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் திட்டத்தின் கீழ் 50 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு 50 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார். இந்நிகழ்வில் உரையாற்றிய வானதி சீனிவாசன், 50 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. பாஜக அரசியல் அதிகாரத்திற்காக வேலை செய்கின்ற கட்சி அல்ல. பிரதமர் ஒவ்வொரு நாளும் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் உழைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் அரசியல் என்பது அதிகாரத்திற்காக அல்ல எனவும் மக்கள் சேவை செய்வதற்காகவே எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் பெண்கள் எப்பொழுதும் எங்களுடன் தொடர்பிலேயே இருங்கள் எனவும் உங்களுக்கு தேவையான அரசு கடன்களை வாங்கி தருவதற்கு நாங்கள் இருக்கிறோம் என தெரிவித்தார். 


இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், சுயம் திட்டத்தின் வாயிலாக பெண்களை தொழில் முனைவோர்கள் ஆக்க வேண்டும் என்ற அடிப்படையின் ஒரு பகுதியாக இந்தப் பகுதியில் 50 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகம் ஒரு பாதுகாப்பான மாநிலம். பெண்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சிறந்த இடத்தை கொடுக்கின்ற மாநிலமாக இருக்கின்ற பெயர் தமிழகத்திற்கு எப்பொழுதும் உண்டு. அதிகமாக உயர்கல்வி கற்கக்கூடிய பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்கின்ற பெண்கள் என பெண்களுக்கு உயர்ந்த ஸ்தானத்தை அளிக்கின்ற மாநிலம் என தமிழகத்தை சுட்டிக்காட்டிய அவர் திமுக அரசாங்கத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்ற கிரிமினல் சம்பவங்கள் அதிர்ச்சியை உருவாக்குவதாக தெரிவித்தார். 


பொது இடங்களில் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத பொழுது குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பக்கூடிய கல்வி நிலையங்கள் அலுவலகங்கள் பொது போக்குவரத்து பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்ற பொழுது மாநில அரசு பெண்களின் பாதுகாப்பில் கவலைப்படுகிறதா? என்ற சூழல் உருவாகிறது என சாடினார். 



அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து பேசிய வானதி சீனிவாசன், அந்த தகவல் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக கூறினார். அந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் திமுக நிர்வாகி என தெரிவித்த அவர் குற்றம் சாட்டப்பட்ட நபர் துணை முதல்வரை சந்திக்க கூடிய அளவிற்கு முக்கியமான பொறுப்பை திமுகவில் வகிப்பதாக சுட்டிக்காட்டினார். இதனால்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபகாலமாக நடைபெறக்கூடிய குற்றங்களில் ஒரு பேட்டன் இருப்பதாக ஒரு சந்தேகத்தை முன் வைக்கிறார் என தெரிவித்தார். குற்ற செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் கட்சியின் பொறுப்புகளையும் அதிகாரத்தையும் பயன்படுத்திக் கொண்டு அதன் வாயிலாக குற்ற செயல்களில் இருந்து தப்பிக்க முடியும் என்ற துணிச்சலோடு இது மாதிரியான குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என பாஜக கருதுவதாக தெரிவித்தார். மாநிலத்தின் முதல்வர் பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டுமென்றால் யார் யாரெல்லாம் இம்மாதிரியான குற்ற சம்பவங்களுடன் இருக்கிறார்களோ அவர்களைப் பற்றி ஒரு தெளிவான புரிதலை அமைச்சர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


அதிகாரத்திற்கு நெருக்கமாக இருக்கின்ற நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுகின்ற பொழுது எந்த ஒரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் அவர்கள் மீது எடுக்கப்படுகின்ற நடவடிக்கையே அவர்களுக்கு எச்சரிக்கையை கொடுக்கும் என கூறினார். மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக முன்வந்து புகார் அளித்திருப்பதை பாஜக வரவேற்பதாகவும் அந்த மாணவிக்கு எங்களுடைய பாராட்டுக்கள். அவருடன் தார்மீக ரீதியாக பாஜகவும் பாஜக மகளிர் அணியும் உடன் நிற்கிறது என தெரிவித்தார். மேலும் இது மாதிரியான சம்பவங்கள் பல்வேறு முறை நடைபெற்றிருப்பதாகவும் அக்கட்சியின் மகளிர் நிர்வாகிகளே கூறும் அளவிற்கு இருப்பதாக சாடினார். இது போன்ற குற்ற செயல்களில் நடவடிக்கைகளை கடுமையாக்குவதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பான சூழலை பெண்களுக்கு உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.  


வீர்பால் திவாஸ் எனப்படும் வீரக்குழந்தைகள் தினம் குறித்து பேசிய அவர், பஞ்சாபில் சீக்கியர்களின் பத்தாவது குருவான கோவிந்த் சிங்கின் இரண்டு குழந்தைகள் முகலாய தளபதி வாஷிர்கானால் கொடுமைப்படுத்தப்பட்டு மதமாற்றத்திற்கு நிர்பந்தப்படுத்தப்பட்டு உயிரோடு சமாதி வைக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் நினைவு தினத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில் அந்த வீரக் குழந்தைகளின் தியாகத்தை போற்றி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று சீக்கிய சமுதாயத்தை சார்ந்த பலரும் இந்த நாட்டிற்கு கொடுத்திருக்கின்ற பங்களிப்புகள் பற்றி பாஜக நாடு முழுவதும் விளக்கி கூறுவதாக தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை குரு துவாராவில் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் அந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்தார். 


வரக்கூடிய ஒரு வருட காலத்தில் வாஜ்பாயின் நூற்றாண்டு விழா கட்சி ரீதியாகவும் அரசு ரீதியாகவும் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தகுந்த திட்டமிடலோடு வாஜ்பாயின் நூற்றாண்டு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற போகிறது என தெரிவித்தார். 


அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் வெளியில் வந்திருப்பது குறித்தான கேள்விக்கு, இது போன்ற விவரங்களில் நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர்களை கூட திறக்க கூடாது என்று கூறுகிறார்கள். ஆனால் காவல்துறைக்கு அது பற்றிய சென்சிட்டிவிட்டி கிடையாது. இதனால் தான் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன் வருவதில்லை எனவும் தெரிவித்தார். மேலும் விவரங்கள் வெளியில் வருவதால் பெண்கள் மிரட்டப்படுகிறார்கள். மறைமுகமாக நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறிய அவர் இன்சென்சிவிட்டி போலிஸ், இன்சென்சிட்டிவ் அரசாங்கம் என சாடினார். 


தவெக தலைவர் விஜய் அவருடைய அரசியல் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு குறித்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருவது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், அரசியல் என்பது மக்களுடன் களத்தில் நிற்பது தான், எந்த பதவியில் எந்த நிலையில் இருந்தாலும் மக்களுடன் நிற்கிறோமா என்பது தான் அரசியல் என தெரிவித்தார். களத்திற்கு வந்தால் தான் அரசியல் வெற்றி களத்தில் மக்களோடு நிற்காவிட்டால் மக்கள் முக்கியமான இடத்தை அவர்களுக்கு கொடுக்கப் போவதில்லை என பதிலளித்தார். 



கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ நிதியில் ஏதேனும் திட்டத்தை கொண்டு வரும் பொழுது அங்கு இருக்கக்கூடிய லோக்கல் கவுன்சிலர்கள் தடுப்பதாகவும் அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் துணை போவதாகவும் சாடிய அவர் வார்டு கவுன்சிலர்கள் அந்த ஏரியாவின் ராஜாக்கள் இல்லை என்றார். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தால் கூட எந்த ஒரு பதிலும் தரப்படுவதில்லை என தெரிவித்தார். 


மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக ஒரு மையத்தை அமைப்பதற்கு இரண்டு கோடி ரூபாய் இந்த வருட நிதியிலிருந்து அளித்ததாகவும், ஆறு மாத காலங்களாகியும் ஒரு இடத்தை இதனால் வரை தேர்வு செய்து தரவில்லை என கூறினார். மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு திட்டங்கள் அறிவிப்பதை வரவேற்பதாகவும் ஆனால் கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு நாங்கள் கொடுத்த நிதியிலிருந்து பயிற்சி மையத்தை அமைத்து தருவதற்கு நிலத்தை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 


இந்த நிகழ்வில் ஒருவர் வானதி சீனிவாசனின் அடுத்த ஜெயலலிதா என்று புகழ்ந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ஆளை விடுங்கள் செய்தியாளர் சந்திப்பு முடிந்தது என புறப்பட்டு சென்றார்.


செய்தியாளர் சந்திப்பிற்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகள் இப்பகுதிக்கு தேவையான வசதிகளை செய்து தரவில்லை என்று பொதுமக்கள் வானதி சீனிவாசனிடம் கூறிய நிலையில் மாநகராட்சி அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்வில் பாஜக பட்டியல் பிரிவு அணி துணைத்தலைவர் உமா மகேஸ்வரி என்பவர், வானதி சீனிவாசனை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்தார்.