கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியபுரம் பிரிவு சக்தி நகரை சேர்ந்தவர் சக்கரை தங்கம். 61 வயதான இவர் ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது 33 வயது மகன் கார்த்திக் கண்ணன், ஐடி கம்பெனியில் பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கார்த்திக் கண்ணனுக்கு திருமணம் நடைபெற்றது. இதனிடையே அவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததன் காரணமாக, அவரது மனைவி அவரை விவாகரத்து செய்து பிரிந்து சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று கார்த்திக் கண்ணன் அதிக குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த அவரது தந்தை சர்க்கரை தங்கத்துடன் கார்த்திக் கண்ணன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சர்க்கரை தங்கத்தின் சட்டையை பிடித்து அடிக்க முயற்சித்தாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சக்கரை தங்கம் கார்த்திக் கண்ணன் கழுத்தில் போட்டிருந்த துண்டை பிடித்து முறுக்கியுள்ளார். மேலும் கழுத்தை துண்டால் நெறித்து, கார்த்திக் கண்ணனை அடித்து பெட்ரூமில் படுக்க வைத்துள்ளார்.
மயக்க நிலையில் பெட்ரூமில் படுத்திருந்த கார்த்திக் கண்ணன் பேச்சு மூச்சுயின்றி இருந்துள்ளார். இதையடுத்து கார் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கார்த்திக் கண்ணனை சக்கரை தங்கம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கார்த்தி கண்ணன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கார்த்திக் கண்ணனின் தந்தை சர்க்கரை தங்கத்தை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மது போதையில் மகனுக்கும், தந்தைக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து மகனை கழுத்தை நெரித்து கொலை செய்ததை சர்க்கரை தங்கம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து சர்க்கரை தங்கத்தை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். பெற்ற மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்