கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3850 ஏக்கர் பரப்பளவில் டிட்கோ தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொழில்பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், தொழில் பூங்கா அமைத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் மாசு ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமெனவும் கூறி அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே  விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல், தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் தொழில்பூங்கா அமைக்கப்படும் என நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.


இந்நிலையில் கோவை மாவட்டம் அன்னூர் தொழில் பூங்கா தொடர்பாக நமது நிலம் நமதே போராட்டக்குழு தலைவர் குமார.ரவிக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்கள் எடுக்கப்படாது என ஆ.ராசா சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. அவருக்கு நன்றி. ஆனால் அப்பகுதியில் தொழில் பூங்கா, தொழிற்சாலை வரக்கூடாது என்பது தான் எங்களது நோக்கம்
அன்னூர், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். தொழில் பூங்கா அமைக்க வெளியிட்டப்பட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும். அப்பகுதியில் பெங்களூரை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் 1200 ஏக்கர் நிலங்களை தான் வாங்கியுள்ளது. அங்கு தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை. தனியார் நிறுவனத்திடம் 2000 ஏக்கர் நிலம் இருப்பதாக ஆ.ராசாவிற்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடம் ஒரே இடத்தில் சதுரமாகவோ, ஒன்று சேர்ந்தது போலவோ இல்லை. அந்த நிலங்கள் விவசாய நிலங்களை சுற்றியுள்ளது. தொழில் பூங்கா அமைந்தால் நிலம், நீர் மாசுபடும். விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.




தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்த சாத்தியமில்லை. தொழில் பூங்கா அமைக்கவும் சாத்தியமில்லை. தனியார் நிறுவன நிலமாக இருந்தாலும், தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்களின் ஒப்புதல் வேண்டும். இப்பகுதி மக்கள் தொழிற்சாலை வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளனர். விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். தொழில் வளம் உள்ள மாவட்டத்தில் புதிய தொழில் துவங்க வேண்டிய அவசியமில்லை. விவசாயிகள் போராட்டத்திற்கு அதிமுக, பாஜக, நாம் தமிழர், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. அண்ணாமலை, ஆ.ராசா இடையேயான பிரச்சனையை விவசாயிகளுடன் சேர்க்காதீர்கள்.


தொழில் பூங்கா திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 3800 ஏக்கர் நிலத்தில் 2600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. 1200 ஏக்கர் தனியார் நிறுவனத்திடம் உள்ளது. இப்பகுதியில் தரிசு நிலம் இல்லை. மேய்ச்சல் நிலம் தான் உள்ளது. தனியார் நிறுவனத்தின் இடத்திலும் தொழிற்சாலை அமைக்க விடமாட்டோம். வன்முறைக்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண