கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே துப்பாக்கியால் சுட்டு விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மேடூர் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி என்ற சின்னத்தம்பி. 55 வயதான விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இரு மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் நேற்றிரவு கண்டியூர் பகவதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (24) என்பவர் அப்பகுதியில் ஆடு ஒன்று காணாமல் போய் விட்டதாக கூறியுள்ளார். அதனையடுத்து அங்கு சென்ற சின்னச்சாமி இரவு வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.


இதனையடுத்து இன்று காலை சின்னத்தம்பி துப்பாக்கியால் சுட்டு இறந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு உறவினர்கள் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காரமடை காவல் துறையினருக்கு உறவினர்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடய அறிவியல் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து காரமடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதனிடையே சந்தேகத்தின் பேரில் ரஞ்சித் என்ற இளைஞரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில், சின்னத்தம்பி  நேற்றிரவு ரஞ்சித்துடன் ஒன்றாக அமர்ந்து ஒன்றாக மது அருந்தியதாகவும், அப்போது அவர்களுக்குள் மது போதையில் ஏற்பட்ட தகராறில் ரஞ்சித் சின்னச்சாமியை துப்பாக்கியால் 11 முறை சுட்டு கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் துப்பாக்கி ரஞ்சித் கைவசம் எப்படி வந்தது என்பது குறித்தும் வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட கள்ளத்துப்பாக்கியா என்பது குறித்தும் காரமடை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண