நகைச்சுவை நடிகர் வடிவேல் நடித்த ஒரு திரைப்படத்தில், “போறது தான் போற. ந்தா அந்த நாயக் கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ” என ஒரு பாட்டி சொல்லும் காட்சியை பார்த்து பலரும் சிரித்து இரசித்து இருப்பார்கள். அந்த பாட்டியை பல திரைப்படங்களில் பார்த்த்திருக்கக்கூடும். ஆனால் எத்தனை பேருக்கு அந்த பாட்டியின் பெயர் தெரியும் எனத் தெரியவில்லை. பல திரைப்படங்களில் பார்த்திருந்தாலும் பெயரற்றுப் போய் வெறும் காட்சி பதிவாக நிற்கும் திரைக்கலைஞர்களை போன்றவர்களில் ஒருவரே, இந்த ரங்கம்மாள் பாட்டி.  


கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் ரங்கம்மாள் பாட்டி. நடிகர் எம்ஜிஆர் நடித்து 1967ல் வெளி வந்த விவசாயி திரைப்படத்தில், தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் மூலம் திரையுலகில் ரங்கம்மாள்  அறிமுகமானார். இதனை தொடர்ந்து சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என தற்போது உள்ள அஜித், விஜய், விஷால், உதயநிதி ஸ்டாலின் வரை பல நடிகர்களுடம் நடித்துள்ளார். இந்நிலையில கடந்த சில மாதங்களாக சினிமா வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில், வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவும் ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் ஒரு மாத காலம் சிகிச்சையில் இருந்த அவர், தற்போது சொந்த ஊரான தெலுங்குபாளையத்துக்கு திரும்பியுள்ளார். நாற்பது வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்தாலும் பெரிதாக ஏதும் சம்பாதிக்காத அவர், வீடு ஏதுமின்றி வாடகைக்கு கூரை வீட்டை ஒன்றை எடுத்து தங்கி உள்ளார். அவரை அவரது சகோதரிகள் மற்றும் அவரது மகன் கவனித்து வருகின்றனர். 





இது குறித்து பேசிய ரங்கம்மாள் பாட்டி, “சினிமா துறையில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக நடித்து இருந்தாலும் பெரிதாக சம்பாதிக்கவில்லை. கல்வி உதவித் தொகை மற்றும் ஏழை மாணவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தேன். தற்போது நடக்க முடியாத சூழல் உள்ளதால், சினிமாவில் நடிக்க முடியவில்லை. இரண்டு படங்களில் நடித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவால் அந்த படங்கள் பாதியிலேயே நிற்கிறது.




சினிமாத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் நடிகர் சங்கத்தினர் உதவ வேண்டும். சினிமா துறையில் என்னுடன் நடிக்காத நடிகர்களே இல்லை. போதுமான அளவு சினிமா துறையில் பெயர் எடுத்துள்ளேன். கடைசி காலத்தை இங்கேயே கழித்துவிட உள்ளேன். தங்குவதற்கு ஒரு வீடு, சாப்பிடுவதற்கு உணவும் கிடைத்தால் போதும். அதற்கு யாராவது ஏற்பாடு செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.




ரங்கம்மாள் பாட்டியின் மகன் ராஜகோபால் கூறுகையில், ”எனது தாயுடன் சென்னையில் தங்கி இருந்தேன். வாடகை வீட்டில் வசித்து வந்தோம். சினிமா வாய்ப்புகள் ஏதும் இல்லை. வறுமையின் காரணமாக சொந்த ஊருக்கு வந்து விட்டோம். உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அம்மா இங்கேயே வசிக்க முடிவு செய்துள்ளார். தற்போது சித்தியின் வீடு அருகே வசித்து வருகிறோம். தனது தாய்க்கும் சினிமா உலகில் வறுமையில் வாடும் சக நடிகர்களுக்கும் நடிகர் சங்கம் உதவ முன் வர வேண்டும்” என அவர் தெரிவித்தார்.