நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றுப்பாதையில் 30 ஆண்டுகளாக கிறிஸ்துவர்கள் சர்ச்சாக பயன்படுத்திவந்த இடத்தில் திடீரென பிள்ளையார் சிலையை வைத்து இந்து அமைப்புகள் வழிபடுவதற்கு கிருத்துவ திருச்சபையினர் எதிர்ப்பு. இந்து சமய அறநிலையத்துறை இடத்தில் வைத்துள்ள பிள்ளையார் சிலையை அகற்ற மாட்டோம் என்று இந்து அமைப்புகள் பிடிவாதம். தக்க நடவடிக்கை எடுக்கும் வரை தர்ணா போராட்டம் நடத்துவோம் எனகிற கிறிஸ்தவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாமக்கல் சாலை கிரிவலப்பாதை பிரிவில் இம்மானுவேல் ஜெப வீடு என்ற கிருத்துவ சர்ச் உள்ளது. இந்த தேவாலயத்தின் அருகில் வீடுகள் கட்டப்பட்டு இருந்தது கடந்த 30 ஆண்டுகளாக இந்த தேவாலயம் செயல்பட்டு வருகிறது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிரிவல விரிவாக்கப் பாதை அமைப்பதற்கும் சாலை விரிவாக்கத்திற்கு இந்த ஆலயத்தின் ஒரு பகுதியை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் வலியுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து அந்த இடத்தை காலி செய்து சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இடத்தில் இந்து அமைப்பினர் திடீரென்று பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டுள்ளனர். இதனை கிறிஸ்தவர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். புகாரைப் பெற்ற காவல்துறையினர் பிள்ளையார் சிலையை எடுக்குமாறு இந்து அமைப்பினரிடம் கூறியுள்ளனர். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை இடத்தில்தான் இந்த சிலையை அமைத்துள்ளோம். சட்டவிரோதமாக கிருத்துவர்கள் இந்த பகுதியை ஆக்கிரமித்து இருந்தார்கள் எனவே நாங்கள் சிலையை அகற்ற மாட்டோம் என்று இந்துமுன்னணியின்ர் மற்றும் பாஜகவினர் அடம்பிடித்து பிடிவாதம் செய்தனர்.


இதனைத் தொடர்ந்து கிறிஸ்துவ தேவாலயத்தை சேர்ந்தவர்கள் 30க்கும் மேற்பட்டோர் சிலையை அகற்ற வலியுறுத்தி தேவாலயத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே பிள்ளையார் சிலை வைத்திருந்த இடத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சாமியாடி அருள்வாக்கு கூற ஆரம்பித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இந்து முன்னணியை சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் கூறும்போது, ‛கிரிவலப்பாதைக்காக சாலை விரிவாக்க பணி நடைபெற்றது அதில் சாலையோரத்தில் இருந்த பிள்ளையார் சிலை வைத்திருந்த பீடம் சிதைந்து போனது. இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இடத்தில் பிள்ளையார் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறோம். ஆனால் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த சிலர் இந்து சமய அறநிலையத்துறை இடத்தை ஆக்கிரமிப்பு செய்து உரிமை கொண்டாடி வருகிறார்கள். நாங்கள் பிள்ளையார் சிலை வைத்து வழிபட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்,’ என்று கூறினார்.


 இதே கருத்தை பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஜினிகாந்த் தெரிவித்தார். கிறிஸ்தவர்கள் தரப்பில் ஜோஸ்வா  ஸ்டீபன் என்பவர் கூறும்போது , ‛‛நாங்கள் 30 ஆண்டு காலமாக இந்த இடத்தில் தேவாலயம் கட்டி சேவை செய்து வருகிறோம். ஆனால் இன்று காலை பிள்ளையார் சிலையை வைத்துவிட்டு நிலத்திற்கு உரிமை கொண்டாடுகிறார்கள். எங்களது இடத்தை காவல் துறையினர் மீட்டு எங்களிடம் தரும் வரை நாங்கள் தேவாலயத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். காலைவரை தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார். இந்து அமைப்பினர் மற்றும் கிறிஸ்தவர்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது . பிள்ளையார் சிலையை எடுத்துவிடவேண்டும் என்று அதிகாரிகள் இந்து அமைப்பினர் இடம் வலியுறுத்தி வந்த நிலையில் இரவு நேரத்தில் கிருத்துவ அமைப்புகள் தர்ணாவில் ஈடுபட்டதால் இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர்  குவிக்கப்பட்டனர்
இதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் இளவரசியோடு இந்து அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் தீர்வு ஏற்படாததால் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்பேரில் அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை வைத்ததாலும் இரு தரப்பினரிடையே மோதல் உருவாகி சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் தவிர்க்க  இரவோடு இரவாக கடும் தள்ளு முள்ளுகளுடன்  விநாயகர் சிலை அகற்றப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.